இந்திய பெண்களுக்கு குட் நியூஸ்.!! AI தொழில்நுட்பத்தின் மூலம் மார்பக புற்றுநோய் கண்டறியும் வசதி.!!
AI: உலகெங்கிலும் புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் புற்றுநோய் பரவல் அதிகரித்திருக்கிறது. உலகில் உள்ள மொத்த மார்பக புற்று நோயாளிகளில் 13.5% பேர் இந்தியாவில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒரு இந்திய பெண்ணிற்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 80 ஆயிரம் பெண்கள் மார்பகப் புற்று நோயினால் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இவ்வாறு பெண்களுக்கு பேராபத்தாக விளங்கும் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கு ஜெர்மனியைச் சேர்ந்த VARA என்ற நிறுவனம் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்(AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மார்பகப் புற்றுநோயை துவக்கத்திலேயே கண்டறிந்து குணப்படுத்திவிடலாம்.
மார்பக புற்றுநோயில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பெரும்பாலான புற்றுநோயாளிகளுக்கு நோய் முற்றிய நிலையில் தான் கண்டுபிடிக்கப்படுகிறது. இதுவே உயிரிழப்பிற்கும் காரணமாக அமைகிறது. தற்போது இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஆரம்ப நிலையிலேயே மார்பகப் புற்றுநோயை கண்டுபிடித்து விடலாம் என VARA நிறுவனத்தின் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மும்பையில் உள்ள சபர்பன் டயக்னாடிக்ஸ் மற்றும் என்எம் மெடிக்கல் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவிலும் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
வராவின் தொழில்நுட்பமானது செயற்கை நுண்ணறிவை டிஜிட்டல் மேமோகிராபியுடன் இணைத்து மார்பக புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறியும். படங்களை பகுப்பாய்வு செய்ய மெஷின் லேர்னிங் வழிமுறையை பயன்படுத்தி சாத்தியமான ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவதன் மூலம் மார்பகப் புற்றுநோய் பரிசோதனையில் துல்லியத்தை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் தேவையற்ற பயாப்சி பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் குறைக்கிறது. உலகில் பிரபலமான மருத்துவ வெளியீடுகளில் ஒன்றான தி லான்செட் இதழில் VARA நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் மற்றும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை எண் அதன் துல்லிய தன்மை பற்றி பாராட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் இரண்டு பேரில் ஒருவர் உயிரிழப்பது வருத்தம் அளிக்கிறது. மார்பகப் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் 97 சதவீதம் உயிர்வாழும் விகிதத்தைக் கொண்டுள்ளது. வாரா தகவல் தொழில்நுட்பத்தின் தேவை இந்தியாவில் தான் அதிகமாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் அவர்களின் இருப்பிடம் அல்லது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் நாடு தழுவிய அளவில் ஸ்கிரீனங்கை அணுகும் வகையில் அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு இந்தியா உதவ வேண்டும் என VARA நிறுவனத்தின் சிஇஓ ஜோனாஸ் மஃப் கேட்டுக் கொண்டுள்ளார்.