குட் நியூஸ்..!! மேலும் 1.48 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வரப்போகுது..!! சட்டப்பேரவையில் வெளியான அறிவிப்பு..!!
மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கடந்த 2023 செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதில், விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 11 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக 1 கோடியே 15 லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி சென்ற இடங்களில் எல்லாம் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு கிடைக்கவில்லையென என குற்றம்சாட்டினர். அப்போது, மக்களவைத் தேர்தலுக்கு பிறகு விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.1,000 கிடைக்கும் என உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். இந்நிலையில், சட்டப்பேரவையில் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளர்கள், புதிய விண்ணப்பதாரர்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டது.
அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தியானது கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். நிராகரிக்கப்பட்ட மேல்முறையீடு விண்ணப்பதாரர்கள் விரும்பினால் நிராகரிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.