விஜயகாந்த் குறித்து 2 நாட்களில் நல்ல செய்தி வரும்..! வீடியோ வெளியிட்டு உண்மையை உடைத்த பிரேமலதா...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த நவம்பர் 18ஆம் தேதி காய்ச்சல், சளி தொந்தரவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக சில தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்ட மியாட் மருத்துவமனை, விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்றும், அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தை நடிகர் சங்க தலைவர் நாசர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். தற்போது அவர் பேச முடியாத நிலையில் இருப்பதால், குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை மோசமடைந்ததாக தகவல் வெளியாகிய நிலையில், பிரேமலதா விஜயகாந்த் வதந்திகளை நம்பவேண்டாம் என்று வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "2 தினங்களுக்கு முன் இதே போன்ற வீடியோவில் கேப்டன் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி இருந்தேன். ஆனால் தொடர்ந்து கேப்டனுக்கு வென்டிலேஷன் அதாவது செயற்கை சுவாசம் பெற்றிருப்பதாகவும், தமிழக முதல்வர் அவர்கள் விஜயகாந்தை சந்தித்துவிட்டு தனக்கு ஆறுதல் கூறியது போன்ற தொடர்ந்து அனைத்து பொய்யான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். இது ஒட்டுமொத்தமாக, தொண்டர்கள், நிர்வாகிகள், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரை மிகப்பெரிய மன உளைச்சல்களுக்கு கொண்டு செல்கிறது. தற்போது மருத்துவமனைக்குள் எந்த விதமான பரபரப்பும் இல்லாமல் அமைதியான சூழ்நிலையில் விஜயகாந்துடன் நாங்கள் இருக்கிறோம்.
ஆனால் பரபரப்புகள் வதந்திகள் எல்லாமே வெளியில் தான் உலா வந்து கொண்டிருக்கிறது. தயவு செய்து மனித நேயத்தோடு வதந்திகளை பரப்ப வேண்டாம். விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார், இரு தினங்களில் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும், வெகு விரைவில் விஜயகாந்த் வீடு திரும்ப இருக்கிறார், நிச்சயம் வந்து அனைவரையும் சந்திப்பார். வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன், இன்றைய தினம் நானும் எங்களுடைய இரண்டாவது மகன் சண்முக பாண்டியனும் விஜயகாந்தை சந்தித்த புகைப்படத்தை சமூக வலைத்தகளத்தில் பதிவிட்டுள்ளோம். பொய் செய்திகளை நம்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.