2024-25ம் நிதியாண்டில் ரூ.10 லட்சம் கோடியை எட்டும் தங்க நகைக் கடன்கள்!. ரேட்டிங் நிறுவனமான ICRA தகவல்!
ICRA: வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத கடன் வழங்குபவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட தங்கக் கடன்கள் நடப்பு நிதியாண்டில் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டும் என்றும், மார்ச் 2027-க்குள் ரூ.15 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தரமதிப்பீட்டு நிறுவனமான ICRA இன் அறிக்கை தெரிவிக்கிறது.
ரேட்டிங் நிறுவனமான ICRA தங்க நகைகள் சார்ந்த விவசாயக் கடன்களால் வங்கிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் (PSBs) மார்ச் 2024 இல் ஒட்டுமொத்த தங்கக் கடன்களில் சுமார் 63 சதவீதத்தை பெற்றுள்ளன, இது மார்ச் 2019 இல் 54 சதவீதமாக இருந்தது, அதே நேரத்தில் NBFC மற்றும் தனியார் வங்கிகளின் பங்குகள் இந்த காலகட்டத்தில் சமமான அளவிலேயே இருப்பதாகவும் நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதேபோல், கடந்த செப்டம்பரில் தங்க நகைக்கடன் வழங்கும் ஒருங்கிணைந்த பிரிவின் வளர்ச்சி, 51% அடைந்துள்ளது. நகைக்கடனுக்கான எளிய அணுகல் வசதி இந்த பிரிவின் வளர்ச்சிக்கான காரணம் என்று கருதப்படுகிறது. இந்தநிலையில், வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத கடன் வழங்குபவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட தங்கக் கடன்கள் நடப்பு நிதியாண்டில் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டும் என்றும் கூறப்படுகிறது.