”நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கை விட மாட்டான்”..!! பாட்ஷா பட பாணியில் மாஸாக புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினி..!!
2024ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இதனை முன்னிட்டு நள்ளிரவில் புத்தாண்டு பிறந்ததும் இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்கள், பொது இடங்களிலும் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்.
அதேபோல, தமிழக மக்களுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், "புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடுவோம். எங்கும் நலமே சூழட்டும்" என்றும் வாழ்த்தி உள்ளார். அதேபோல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், "மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உழவர்கள், தொழிலாளர்களின் நலன் காப்போம். முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்போம்.
உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை. சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொங்கல், தீபாவளி, மற்றும் புத்தாண்டு தினங்களில், தன்னுடைய ரசிகர்களை ரஜினி சந்தித்து வாழ்த்து கூறுவது வழக்கமாகும். இதற்காகவே, சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ரஜினிகாந்தை சந்திக்க அவரது ரசிகர்கள் வருகை தருவார்கள். ரஜினியின் வாழ்த்தை பெறுவதற்காக, நள்ளிரவு முதலே சிலர் காத்து கிடப்பார்கள்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 2025 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். தான் நடித்த பாட்ஷா படத்தில் இடம்பெற்றிருந்த வசனத்தை குறிப்பிட்டு, இந்த புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள். #Welcome2025" என பதிவிட்டுள்ளார்.