உலக தாதா சோட்டா ராஜனுக்கு உடல்நலக்குறைவு?. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதி!
Chhota Rajan: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உலக தாதா சோட்டா ராஜன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜனவரி 10) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த கேங்ஸ்டர் சோட்டா ராஜன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று வாழ்ந்து வந்தான். அவனுக்கும் மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிமிற்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் இருந்து கொண்டே இருந்தது. தாவூத் இப்ராஹிம் ஆட்கள் பல முறை சோட்டா ராஜனை வெளிநாட்டில் வைத்து கொலைசெய்ய முயன்றனர். ஆனால் அதில் சோட்டா ராஜன் தப்பித்துவிட்டான். சோட்டா ராஜன் மீது ஏராளமான கொலை மற்றும் கொலை மிரட்டல் வழக்குகள் மும்பையில் இருக்கிறது. அதில் காம்தேவியில் கோல்டன் குரொவின் ஹோட்டல் அதிபர் ஜெயா ஷெட்டி கொலை வழக்கும் ஒன்றாகும்.
2001-ம் ஆண்டு மே 4-ம் தேதி கோல்டன் ஹோட்டலுக்குள் சென்று ஜெயா ஷெட்டியை மர்ம கும்பல் சுட்டுக் கொலைசெய்தது. இவ்வழக்கு மும்பை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு மே 30ம் தேதி சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குண்டர் கும்பலுக்கு ஆயுள் தண்டனையும், 16 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்தநிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உலக தாதா சோட்டா ராஜன் இன்று (ஜனவரி 10) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜன் டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.