’சிறுமிகள் வன்கொடுமை’..!! ’இனி மரண தண்டனை’..!! ’உறவினர் முன்னிலையில் பெண் வீட்டிலேயே வாக்குமூலம்’..!! அமித்ஷா பரபரப்பு பேட்டி..!!
புதிய குற்றவியல் சட்டங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார் .
புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”முதலில் நம் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நம்முடைய சொந்த குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. தண்டனைக்கு பதிலாக தற்போது நியாயம் கிடைக்கும். தாமதத்துக்கு பதிலாக விரைவான விசாரணையும், தீர்ப்பும் கிடைக்கும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கூட்டாக பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டால் 20 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும். சிறுமிகளை வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும். பொய் வாக்குறுதி அளித்து அல்லது அடையாளத்தை மறைத்து பாலியல் ரீதியாக ஏமாற்றினால் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. பெண் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண் வீட்டிலேயே வாக்குமூலம் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையும் ஆன்லைனில் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 12.10 மணிக்கு புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் குவாலியர் காவல் நிலையத்தில் முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.