"எனக்கு செல்போன் தான் முக்கியம்"; செல்போனிற்காக சிறுமி செய்த காரியம்..
குடி, கஞ்சா, சிகரெட் ஆகியவற்றிக்கு அடிமையாவதை விட கொடுமையானது செல்போனிற்கு அடிமையாவது. ஆம், செல்போனால் பறிபோகும் உயிர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. அந்த வகையில், செல்போனால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவருக்கு 17 வயதான சத்தியப்ரீதிகா என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 28-ந் தேதி சத்தியப்ரீதிகா தனது வீட்டில் செல்போனை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அவர் செல்போன் பார்ப்பதை கவனித்த அவரது பெற்றோர், செல்போனை அதிக நேரம் பார்க்க கூடாது என்று கூறி கண்டித்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த சத்தியப்ரீதிகா, விஷம் குடித்துள்ளார். மயங்கி கீழே கிடந்த சத்தியப்ரீதிகாவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சோழவந்தான் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.