கோவையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்த விவகாரம்..!! அஜாக்கிரதையாக செயல்பட்ட ஓட்டுநர் அதிரடி கைது..!!
கோவையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 18 டன் சமையல் கேஸ் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று அவினாசி மேம்பாலத்தில் ஏறியபோது திடீரென டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டேங்கரில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து லாரி டிரைவர் ராதாகிருஷ்ணன் உடனடியாக சம்பந்தப்பட்ட கேஸ் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், பீளமேடு தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு காலை 7 மணியளவில் டேங்கரில் இருந்து கேஸ் கசிவது தடுத்து நிறுத்தப்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் விபத்து நிகழ்ந்த மேம்பாலத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தை சுற்றி 1 கிலோ மீட்டருக்கும் மேல் உள்ள பகுதியில் இருந்த 35 பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கேஸ் கசிந்த நேரத்தில் அந்த பகுதியில் தீப்பொறி அல்லது செல்போன் கதிர்வீச்சு பட்டிருந்தால், டேங்கர் வெடித்து பெரியளவில் சேதம் ஏற்பட்டு இருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கோவை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், லாரி டிரைவரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிரைவர் ராதாகிருஷ்ணனை கைது செய்த போக்குவரத்து போலீசார், அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.