'ரசாயனம் மூலமாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்' - எச்சரிக்கை விடுத்த FSSAI..!
மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரசாயனம் கலந்த பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ள ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "கால்சியம் கார்பைடு கொண்டு செயற்கையாக பழுக்க வைப்பதற்கான தடையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பழுக்க வைக்கும் அறைகளை இயக்கும் வர்த்தகர்கள், பழங்கள் கையாளுபவர்கள், உணவு வணிக ஆபரேட்டர்கள் உள்ளிட்டோர் இதன்பொருட்டு எச்சரிக்கப்படுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாம்பழ சீஸனில், கால்சியம் கார்பைடு கொண்டு பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பது தொடர்பான புகார்கள் அதிகரித்தன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. பொதுவாக மாம்பழம் போன்ற பழங்களை பழுக்க வைக்கும் கால்சியம் கார்பைடு, ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸின் தீங்கு விளைவிக்கும் தடயங்களைக் கொண்ட அசிட்டிலீன் வாயுவை வெளியிடுகிறது.
கால்சியம் கார்பைடு பழங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பழங்களில் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸின் எச்சங்களை விட்டுச்செல்லும் வாய்ப்புகளும் உள்ளன என்பதால் பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்படுத்துவது உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (விற்பனை மீதான தடை மற்றும் கட்டுப்பாடுகள்) விதிமுறைகள், 2011-ன் கீழ் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்சியம் கார்பைடு பயன்படுத்தப்படுவதால், தலைச்சுற்றல், நீடித்த தாகம், எரிச்சல், பலவீனம், விழுங்குவதில் சிரமம், வாந்தி மற்றும் தோல் புண்கள் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, அசிட்டிலீன் வாயுவானது அதைக் கையாளுபவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட கால்சியம் கார்பைட்டின் பரவலான பயன்பாட்டின் சிக்கலைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் பழங்கள் பழுக்க வைப்பதற்கு பாதுகாப்பான மாற்றாக எத்திலீன் வாயுவைப் பயன்படுத்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த எத்திலீன் வாயுவை 100 பிபிஎம் வரை செறிவுகளில் பயன்படுத்தலாம்.
வாவ்…! வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கும் விபத்து காப்பீடு…! உடனே பதிவு செய்ய வேண்டும்…!