செக்...! வரும் 9-ம் தேதி முதல் கனிம குவாரி குத்தகைதாரர்கள் அனுமதி பெறுவது கட்டாயம்...!
கனிம குவாரி குத்தகைதாரர்களும் இணையதளம் வாயிலாக அனுமதி பெறுவது கட்டாயம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள சிறு கனிமம் (Minor Mineral) குத்தகை குறித்த விபரங்கள் அனைத்தும் http://mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. கனிம குவாரி குத்தகைதாரர்களும் மேற்படி இணையதளத்தில் பதிவு செய்து, இணையதளம் வாயிலாக உரிய கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பித்து எடுத்துச் செல்லப்படும் கனிமத்திற்கு மொத்த இசைவாணை சீட்டினை இணையதளம் வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை 09.05.2024 முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு நடைமுறையில் உள்ளது.
தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அச்சடிக்கப்பட்ட நடைச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக இணையதளம் வாயிலாக அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய நடைச்சீட்டுகளை கனிமவளத்துறையின் மூலம் விரைவில் முழுமையாக செயல்படுத்த அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், கனிம கடத்தல், அதிகபாரம் ஏற்றி செல்லுதல், தார்பாய் கொண்டு மூடாமல் செல்லுதல் ஆகியவற்றை முற்றிலும் கட்டுப்படுத்திட காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட குவாரி, கிரஷர் மற்றும் வாரி உரிமையாளர்களுடன் ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாசுகட்டுப்பாட்டு வாரியம், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் ஆகியோர்களால் பலமுறை கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன், வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்து துறை, கனிமவளத்துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி வாகனம் கைப்பற்றுதல் குறித்த விவரங்கள் வாரந்தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்காளல் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேலும், 2024 - 2025-ம் ஆண்டில் உரிய அனுமதியின்றி கனிமம் கொண்டு சென்ற 55 வாகனங்கள் மற்றும் அதிகபாரம் ஏற்றிச் சென்ற 518 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி விதிகளை முழுமையாக பின்பற்றி உரிய முறையில் கனிமங்கள் கொண்டு செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.