அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. மதுரை To சென்னை வரை பாஜக மகளிரணி சார்ப்பில் நீதிப்பேரணி..!! - அண்ணாமலை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதற்கிடையே, சம்பவம் குறித்த எப்.ஐ.ஆர்., வெளியாகி, அதில் மாணவியின் பெயர் விவரங்களும் வெளியாகி பெரும் சர்ச்சை கிளம்பியது. அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க.,- பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நடந்த சம்பவம், எப்.ஐ.ஆர்., வெளியானது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலை மாணவி பலாத்கார வழக்கில் உண்மையை மறைக்க முயலும் திமுக அரசை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் மதுரை டூ சென்னை வரை நீதி பேரணி நடத்த உள்ளதாக பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்ட பதிவில், "அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் திருமதி @UmarathiBJP அவர்கள் தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது. வரும் ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களைச் சந்தித்து, மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; விஜயை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் அண்ணாமலை..!! என்ன விஷயம்..?