காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை!. நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்!. ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து உற்சாகம்!
New Year celebration: இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களில் மக்கள் உற்சாகமாக திரண்டு ஆடி பாடி மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. 2024 ஆம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தையும் மக்கள் கடற்கரையில் கண்டு ரசித்தனர். கொல்கத்தாவில் சாலைகளில் வண்ண விளக்குகள் பொருத்து மக்கள் ஆங்காங்கே புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். புத்தாண்டை கொண்டாடும் வகையில் காத்தாடி மற்றும் பிற பொருட்களை வாங்க ஏராளமானோர் சந்தையில் குவிந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் பள்ளத்தாக்குகள் மற்றும் பனிக்கு மத்தியில் மக்கள் புத்தாண்டை கொண்டாடினர். புத்தாண்டையொட்டி, அமிர்தசரஸ் பொற்கோயில் மின்விளக்குகளால் ஒளிர்ந்தது. பக்தர்கள் அங்கு சென்று தரிசனம் செய்து ஆசி பெற்றனர். மேற்கு வங்காளத்தில் உள்ள உள்ளூர் நாட்டுப்புற பாடகர்கள் (பவுல் ஃபகிர்) பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சாந்திநிகேதன் அருகே புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள்.
புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர். சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். அதே சமயம் இந்தியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாகச் சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மகாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட இடங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர், கத்திப்பாரா சதுக்கம் ஆகிய பகுதிகளில் திரளாக கூடியிருந்த மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இரவு 11 மணிமுதல் நள்ளிரவு ஒரு மணி வரை புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. சரியாக நள்ளிரவு 12 மணிக்கு பல இடங்களில் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர். மேலும் கேக் வெட்டியும் இனிப்புகளை பரிமாறி கொண்டாடினர்.