ஜூலை 15 முதல் மேலும் 1.48 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 கிடைக்கப்போகுது..!! முதல்வர் முக.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
தமிழகத்தில் 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், மேலும் பலருக்கு உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2023 ஜனவரி மாதத்தில் இருந்து மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்தவர்களின் தகுதி சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகள் இருந்த நிலையில், புதிதாக திருமணமானோர் மற்றும் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தோர் என சுமார் 2 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டதால் தற்போது தமிழ்நாட்டில் ஏற்கனவே குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், ஜூன் மாதத்திற்கு பிறகு புதிய குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள் ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை இந்த மாதம் முதல் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஜூலை 15ஆம் தேதி முதல் புதிதாக 1.48 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்படுவதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.