கேஸ் சிலிண்டர் முதல் சிம் கார்டு வரை.! இன்று முதல் அமலுக்கு வர இருக்கும் புதிய விதிமுறைகள்.!
வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர், இன்று முதல் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் டிசம்பர் 1-ம் தேதி முதல் பல புதிய சட்டங்களும் நடைமுறைகளும் அமலுக்கு வர இருக்கின்றன. அவை என்ன என்று இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
வருகின்ற டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து, அதாவது இன்றைய தினம் முதல் ஆவின் பாலகத்தில் பத்து ரூபாய்க்கு 225 மில்லி லிட்டர் பால் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டிலைட் பால் என்ற பெயரில் அறிமுகமாகும் இந்தப் பாக்கெட் அரை லிட்டர் 21 ரூபாய்க்கு விற்பனையாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு துறை இன்றைய தினம் (டிசம்பர் ஒன்றாம் தேதி) முதல் சிம் கார்டு வாங்குவதற்கும் சிம் கார்டுகளை விற்பனை செய்வதற்கும் புதிய நடைமுறைகளை அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த புதிய விதிமுறைகளின் படி ஒருவரும் முழு விபரங்களையும் கொடுக்காமல் சிம்கார்டு வாங்க முடியாது. மேலும் ஒரு தனிநபர் மொத்தமாக சிம்கார்டு வாங்குவதும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த விதியை மீறுபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தொலைத்தொடர்புத்துறை அறிவித்துள்ளது. தகவல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதை தடுப்பதற்காக இந்த சட்டங்கள் அமலுக்கு வர இருக்கின்றன.
இந்திய குடிமகனின் தனித்துவ அடையாளமான ஆதார் அட்டைகளை அப்டேட் செய்வதற்குரிய கடைசி நாள் டிசம்பர் 14. கடந்த பத்து வருடங்களில் தங்களது ஆதார் அட்டையை அப்டேட் செய்யாத இந்திய குடிமக்கள் அனைவரும் டிசம்பர் 14ஆம் தேதிக்கு முன்பாக தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு யூஐடிஏஐ பொது மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் இதனை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.
கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் போன்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அப்ளிகேஷன்களில் செயல்படாத ஐடி டிசம்பர் ஒன்றாம் தேதி முதல்(இன்றைய தினம் முதல்) செயலிழக்க செய்யப்படும் என தேசிய கட்டண கழகம் அறிவித்திருக்கிறது. ஆன்லைன் மூலம் நடைபெறும் மோசடிகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
மேலும் டிசம்பர் ஒன்றாம் தேதி(இன்று) முதல் சமையல் எரிவாயு விலையில் மாற்றங்கள் வர இருக்கிறது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இருக்கும் என மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இவை டிசம்பர் மாதத்தில் வர இருக்கும் புதிய விதிமுறைகள் ஆகும்.