அசத்தும் இந்தியா...! 2ஜி முதல் 5 ஜி வரை... அனைத்தும் ஒரே பிராட்பேண்ட் உருவாக்க மத்திய அரசு ஒப்பந்தம்...!
2ஜி, 3 ஜி, 4 ஜி, 5 ஜி பேண்டுகளை உள்ளடக்கும் ஒற்றை பிராட்பேண்ட் ஆண்டெனாவிற்கான மல்டிபோர்ட் ஸ்விட்ச் உருவாக்கத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பாரத் 6ஜி தொலைநோக்கு’, ‘மேட் இன் இந்தியா’ ‘தற்சார்பு இந்தியா’ ஆகியவற்றுடன் இணைந்து, மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையின் முதன்மையான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி.டாட்) பிலானியில் உள்ள சிஎஸ்ஐஆர் – மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (சிஇஇஆர்ஐ) 2ஜி, 3 ஜி, 4 ஜி, 5 ஜி ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் ஒற்றை பிராட்பேண்ட் ஆண்டெனாவிற்கான மல்டிபோர்ட் ஸ்விட்ச் மற்றும் டியூனபிள் இம்பிடான்ஸ் மேட்சிங் நெட்வொர்க்கை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையின் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகிறது இந்திய புத்தொழில் நிறுவனங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், தொலைத்தொடர்பு தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வடிவமைத்தல், உருவாக்குதல் மற்றும் வணிகமயமாக்குவதற்கான ஒரு முக்கியமான சாதனமாகும். மேலும் மேம்பட்ட ஆண்டெனா செயல்திறனுடன் பல தகவல்தொடர்பு பேண்டுகளை உள்ளடக்கிய மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிக்கல் தொழில்நுட்ப அடிப்படையிலான மாறுதல் நெட்வொர்க்கை உருவாக்குவதில் கவனம் செலுத்தும்.
சி-டாட் இயக்குநர் டாக்டர் பங்கஜ் குமார் தலேலா, பிலானியில் உள்ள சிஎஸ்ஐஆர் – சிஇஇஆர்ஐ - முதன்மை ஆய்வாளர் டாக்டர் தீபக் பன்சால் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் தொலைத் தொடர்புத் துறையில் நவீன உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி திறன்களை உருவாக்குவதில் கூட்டு வாய்ப்புகள் மற்றும் முயற்சிகளுக்காக டாக்டர் பன்சால் தொலைத் தொடர்புத் துறை மற்றும் சி-டாட்-ஐ பாராட்டினார். உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்து பேண்டுகளையும் ஒரே ஆண்டெனாவில் நிறுவ முடியும்.