நவம்பர் 16 முதல் 24-ம் தேதி வரை... வாக்காளர் பட்டியலில் திருத்த முகாம்..! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு...!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் வாக்குச்சாவடிகளில் நவம்பர் 16, 17, 23, 24 நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2025 ஜனவரி மாதத்தை தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கேற்ப, அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்களும் வெளியிடப்பட்டன. வரைவு வாக்காளர் பட்டியல்களை https://www.elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் காணலாம்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகளால், வாக்காளர் பட்டியலின் 2 நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்படும். 2025 வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 27 லட்சத்து 30,588 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 3 கோடியே 7 லட்சத்து 90,791 பேரும் பெண்கள் 3 கோடியே 19 லட்சத்து 30,833 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 8,964 பேரும் உள்ளனர்.
வாக்காளர்களைக் கொண்ட சட்டப்பேரவை தொகுதி சோழிங்கநல்லூர் ஆகும். இங்கு மொத்த வாக்காளர்கள் 6 லட்சத்து 76,133 பேர். ஆண்கள் 3 லட்சத்து 38,183 பேர், பெண்கள் 3 லட்சத்து 37,825 பேர், மூன்றாம் பாலினத்தவர் 125 பேர் உள்ளனர். குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டப்பேரவை தொகுதி கீழ்வேளுர் ஆகும். இங்கு மொத்தம் ஒரு லட்சத்து 73,230 பேர். அதில் ஆண்கள் 85,065, பெண்கள் 88,162, மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் வாக்குச்சாவடிகளில் நவ.16, 17, 23, 24 (சனி, ஞாயிறு) நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.