அடிக்கடி கட் ஆகும் மின்சாரம்!… ரெயின் கோட் வாங்குவதில் கவனம்!... மழைக்கால டிப்ஸ்!
தற்போது மழைக்காலம் என்பதால் தினமும் வேலை , கல்லூரிக்குச் செல்வது சிரமமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் எப்படி உடையணிந்து சென்றாலும் மழையில் நனையக் கூடும். எனவே மழைக் காலத்தில் சாதாரண நாட்களைக் காட்டிலும் உடை அணிவதில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். எவ்வாறு என்று பார்க்கலாம்.
எடை குறைவான, விரைவில் ஈரத்தை உறிஞ்சக் கூடிய உடையை தேர்வு செய்யுங்கள். இந்த சமயத்தில் ஜீன்ஸ், அதிக எடை நிறைந்த அதாவது பனிக் காலத்தில் அணியக் கூடிய உடைகளை தவிருங்கள். ஒருவேளை அப்படி அணிந்து சென்றாலும் ஈரம் விரைவில் வற்றாமல் அந்த ஈரம் உங்களுக்கு காய்ச்சல், சளியை உண்டாக்கலாம்.
அதேபோல் அணியும் ஆடை டிரான்ஸ்பரண்டாக அதாவது தண்ணீர் பட்டால் உடல் தெரியும் வகையிலான ஃபேப்ரிக்கை தவிர்க்கவும். வெள்ளை , சந்தன நிற ஆடைகளும் ஈரம் பட்டால் தெரியும். எனவே மழைக்காலங்களில் இதுபோன்ற சிக்கல்களையும் யோசித்து ஆடையை அணியுங்கள். முடிந்தால் பேக்கில் மாற்று ஆடை வைத்துக்கொள்வது நல்லது. காலை அலுவலகம் செல்லும்போதே எதிர்பாராத விதமாக கனமழையில் சிக்கிக்கொண்டால் அப்படியே இருக்கையில் அமர முடியாது. எனவே மாற்று உடை வைத்துக்கொள்வது வசதியாக இருக்கும்.
பாதம் வரை தொடும் ஆடைகளை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக பெண்கள் முழுநீள குர்த்தா, கவுன் அணிவதை மழைக்காலத்தில் தவிருங்கள். முட்டிக்கு மேல் வரை உள்ள குர்த்தா, டாப் அணியுங்கள். ஆண்கள் ஷார்ட்ஸ் , லூஸாக இருக்கும் பேண்ட் அணியலாம். பெண்கள் ஆங்கிள் லென்த் லெங்கின் பேண்ட் அணியலாம். இதனால் சகதிகள் , கழிவு நீர் ஆடையில் படாமல் தவிர்க்கலாம்.
ரெயின் கோட்டை மழைக்காலங்களில் மழை வரவில்லை என்றாலும் எடுத்துச்செல்லுங்கள். எந்த நேரத்திலும் மழை பெய்யலாம். எனவே தயங்காமல் உடல் முழுவதும் மூடும் வகையிலான ரெயின் கோட் வாங்குவது நல்லது. அதேபோல் நியான் அல்லது வெளிச்சம் எதிர்வினையாற்றும் (light-reflecting rain coats) வகையிலான ரெயின் கோட் வாங்குவது நல்லது. ஏனெனில் மழைக்காலங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும். அந்த நேரத்தில் நீங்கள் நடந்து செல்லும்போது எதிரே வரும் நபருக்கோ, வண்டிக்கோ உங்களை எளிதில் கண்டறிய உதவும்.
நீர் புகாத பூட்ஸ் வாங்குவது மழைக்காலத்தில் உதவும் அல்லது காலணி, ஷூவை மூடும் வகையிலான வாட்டர் ப்ரூஃப் கவர் வாங்கி அணியுங்கள். இதனால் ஷூ நனையாது என்பதை விட சாக்கடை நீர், சகதி காலில் படாமல் தவிர்க்கலாம். இதனால் நோய் தொற்று பரவுவதையும் தவிர்க்கலாம். பெண்கள் ஹீல்ஸ் போன்ற காலணிகளை தவிர்ப்பது நல்லது. அலுவலகம், கல்லூரி செல்வோர் தங்கள் பைகளை மழையில் நனையாதவாறு பாதுகாக்க நீர் புகாத பைகளை பயன்படுத்துவது நல்லது. தினசரி வேலைக்கு எடுத்துச்செல்லும் லாப்டாப் பேகை மூடும் வகையிலான தண்ணீர் புகாத பை வாங்கி பயன்படுத்துங்கள். உங்கள் செல்ஃபோனையும் நீர் புகாத பை வாங்கி மூடுங்கள். இதனால் மழையினால் தேவையில்லாத சிக்கல்களை தவிர்க்கலாம்.