சாலை விபத்தில் அடிபட்டால் இலவச சிகிச்சை!… 3 மாதங்களில் அறிமுகம்!… மத்திய அரசு திட்டம்!
சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு, 'கேஷ் லெஸ்' எனும், மருத்துவமனைக்கு கையிலிருந்து பணம் செலுத்த தேவையில்லாத சிகிச்சையை, நாடு முழுதும் அறிமுகப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை செயலர் அனுராக் ஜெயின் தெரிவித்துள்ளார்.
விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இலவச சிகிச்சை அளிப்பது, திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் ஒரு பகுதியாகும். இதை சில மாநிலங்கள் அமல்படுத்திஉள்ளன. இதைத்தொடர்ந்து, தற்போது சாலை போக்குவரத்து அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து, நாடு முழுதும் இதை முழுமையாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த வசதி மூன்று அல்லது நான்கு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும். சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு, 'கோல்டன் ஹவர்' எனப்படும், விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரம் மிக முக்கியமாக கருதப்படுகிறது.
இந்நேரத்திற்குள் சாலை விபத்துக்குள்ளானவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்து, அவர்களது உயிரை காத்திடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக, பள்ளி, கல்லுாரி பாடத்திட்டங்களில் ஒரு பகுதியாக, சாலை பாதுகாப்பை விரைவில் செயல்படுத்த மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில், நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்து வருகிறது என்றும் அனுராக் ஜெயின் தெரிவித்துள்ளார்.