For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இலவசம்!… இன்று உலக பாரம்பரிய தினம்!… இந்தியாவும் சில முக்கியமான இடங்களும்!

05:00 AM Apr 18, 2024 IST | Kokila
இலவசம் … இன்று உலக பாரம்பரிய தினம் … இந்தியாவும் சில முக்கியமான இடங்களும்
Advertisement

World Heritage Day: உலக பாரம்பரிய தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை, கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் இன்று கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை அறிவித்துள்ளது.

Advertisement

உலகெங்கும் அமைந்துள்ள பாரம்பரிய சின்னங்களை அந்தந்த நாடுகள் பாதுகாத்து போற்றிக்கொண்டாடுவதோடு அதன் பெருமைகளை வளரும் தலைமுறைகளுக்கு தெரிவிக்கும் வகையில் உலக பாரம்பரிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மனித வாழ்க்கையோடு பின்னி பிணைந்தவைகளை கொண்டாடும் வகையிலும் போற்றி பாதுகாக்கும் வகையிலும் சர்வதேச அளவில் பல்வேறு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

அப்படி மனித ஆற்றிலின் அதிசயங்களாய் உருவான கோவில்கள், கட்டடங்கள், அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், அகழாய்வில் கிடைக்கும் படிமங்கள் உள்ளிட்டவற்றை நினைவு கூறவும் அதனை போற்றி பாதுகாக்கவும் நினைவு சின்னங்களுக்கும், புராதன இடங்களுக்காகவும் உலக பாரம்பரிய தினம் (World Heritage Day, April 18 ) ஆண்டு தோறும் ஏப்ரல் 18 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தக் கொண்டாட்டம் முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் தொடங்கி வைக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18 ஆம் தேதியை சர்வதேச நினைவிடங்கள் தினமாக (International Day for Monuments and Sites )கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது.

ஒரு நாட்டுக்கு அழகும், பெருமையும் சேர்ப்பது அதன் பழங்கால நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களே. இந்த நாளில் என்ன செய்யலாம் என்று அந்த மாநாடு சிலவற்றை பரிந்துரைத்துள்ளது. பழங்கால கட்டட பெருமைகளை கண்காட்சிகளாக அமைத்து விவரிப்பது. கட்டணம் ஏதுமில்லாமல் இந்தத் தினத்தில் நினைவிடம், மற்றும் அருங்காட்சியங்களில் பொது மக்களை அனுமதிப்பது. இந்தத் தினத்தின் தேவை பற்றி பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது.

பள்ளிக்கூட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாரம்பரியத்தின் பெருமைகளை எடுத்துச் செல்வது..! நிகழ்ச்சிகள் நடத்துவது. மனித இனத்துக்கே பொதுவானவை இயற்கை வளங்கள். ஆனால் கவனிப்பாரற்று இந்த பழங்கால நினைவுச் சின்னங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன. உலகின் மிக முக்கிய நினைவுச் சின்னங்களை பாதுகாக்க யுனெஸ்கோ உள்ளிட்ட அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் உலக பராம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவின் எட்டு முக்கிய பாரம்பரிய சின்னங்கள் இங்கே: அஜந்தா குகைகள், மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் அமைந்துள்ள அஜந்தா குகைகள், புத்த மத சிற்பக் கலையின் தலைசிறந்த படைப்புகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 480 வரை செதுக்கப்பட்ட சுமார் 30 குகைக் கோவில்கள், பாறை ஓவியங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் இங்கே உள்ளன. இந்த குகைகள் குறித்து இந்தியாவிற்கு வந்த பல்வேறு சீன புத்த பயணிகளின் நினைவுக் குறிப்புகளிலும், 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அக்பர் கால முகலாய அதிகாரியாலும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் பெரிய கோயில், தமிழ்நாடு: தமிழ்நாட்டில் அமைந்துள்ள தஞ்சை பெரிய கோயில் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற சோழப் பேரரசன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. தமிழர் கட்டிடக்கலையின் அடையாளமாக விளங்கும் இந்த மிக பிரமாண்டமான கோயில் கி.பி 1003 - 1010 வரையிலான ஏழே ஆண்டுகளில் கட்டப்பட்டது என்பது ஆச்சர்யமாகும்.

தமிழின் சிறப்பை விளக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கோயிலில் தமிழின் மெய்யெழுத்துக்களை குறிக்கும் வகையில் 12 அடி உயர சிவலிங்கம், மெய்யெழுத்துக்களை குறிக்கும் வகையில் 18 அடி உயர சிவலிங்க பீடம், உயிர் மெய் எழுத்துக்களை குறிக்கும் 216 அடி உயர கோபுரம், மொத்த எழுத்துக்கள் 247 என்பதை குறிக்கும் சிவலிங்கம் மற்றும் நந்திக்கு இடையிலான தூரம் என பல்வேறு சிறப்புகள் இந்த கோயிலில் அமைந்துள்ளன. 1987 ஆம் ஆண்டு இந்த கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. சோழர்களால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் கோயில் ஆகியவையும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன

காசிரங்கா தேசியப் பூங்கா, அஸ்ஸாம்: காசிரங்கா தேசியப் பூங்காவில் மாபெரும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உலகில் உள்ளவற்றில் மூன்றில் இரண்டு பங்கு வாழ்கின்றன. காசிரங்கா தேசிய பூங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், ராயல் வங்கப் புலி, ஆசிய யானை, காட்டு நீர் எருமை மற்றும் சதுப்பு நில மான் ஆகிய அரியவகை விலங்குகள் அதிகளவில் வாழ்கின்றன. இந்த பூங்காவில் உயரமான யானைப் புல், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆழமான வெப்பமண்டல ஈரமான அகன்ற இலைகள் கொண்ட காடுகள் உள்ளன. பிரம்மபுத்திரா உட்பட நான்கு முக்கிய ஆறுகள் மற்றும் பல சிறிய நீர்நிலைகள் இந்த பூங்காவில் ஓடுகின்றன.

தாஜ்மஹால், உத்தரபிரதேசம்: தாஜ்மஹால், உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று, முகலாய பேரரசர் ஷாஜகான் 1631 இல் இறந்த தனது மூன்றாவது மனைவி மும்தாஜ் பேகத்தின் நினைவாக இதைக் கட்டினார். இது 1983 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில், வகை i இன் கீழ் கலாச்சார நினைவுச்சின்னமாக சேர்க்கப்பட்டது.

கோனார்க் சூரியக் கோயில், ஒடிசா: ஒடிசாவின் கொனார்க்கில் உள்ள 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பிரமாண்டமான சூரியக் கோயில் இதுவாகும். இது வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள மகாநதி டெல்டாவில், 24 சக்கரங்களுடன் சூரியனின் தேர் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழு குதிரைகளால் இயக்கப்படும் குறியீட்டு கல் சிற்பங்களும் இக்கோயிலில் இடம்பெற்றுள்ளன.

சாஞ்சி, மத்தியப் பிரதேசம்: சாஞ்சியில் உள்ள இந்த புத்த நினைவுச்சின்னங்கள் கி.மு 200 ஆம் ஆண்டு முதல் கி.மு. 100 ஆம் ஆண்டு வரையிலான புத்த கட்டமைப்புகளின் வரிசையாகும், இவை மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. 1989 ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று, யுனெஸ்கோ அமைப்பு இந்த நினைவுச்சின்னங்களின் தனித்துவமான கலாச்சார முக்கியத்துவம் காரணமாக இதை உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது.

மகாபோதி கோயில், பீகார்: மகாபோதி கோயில் என்பது பீகாரின் புத்தகயாவில் உள்ள ஒரு புத்த கோயிலாகும், இங்கு புத்தர் ஞானம் பெற்றதாக நம்பப்படுகிறது. இந்த இடமானது போதி மரத்தின் வழித்தோன்றலையும் கொண்டுள்ளது, இந்த மரத்தின் அடியில்தான் புத்தர் ஞானம் அடைந்தார் என நம்பிக்கை நிலவுகிறது. மேலும் இந்த கோயில் வளாகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்து மற்றும் புத்த மதத்தவரின் புனித யாத்திரை தலமாக இருந்து வருகிறது.

சம்பானேர்-பவகாத் தொல்பொருள் பூங்கா, குஜராத்: சம்பானேர்-பவகாத் தொல்பொருள் பூங்கா குஜராத்தில் அமைந்துள்ளது. இது 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சாவ்தா வம்சத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க ஆட்சியாளரான வன்ராஜ் சாவ்தாவால் நிறுவப்பட்டது. மசூதிகள், கோயில்கள், தானியக் களஞ்சியங்கள், கல்லறைகள், கிணறுகள், சுவர்கள் மற்றும் மொட்டை மாடிகள் ஆகியவை சம்பானேர்-பாவாகத்தில் காணப்படும் பதினொரு வகையான மிகச்சிறப்பு வாய்ந்த கட்டமைப்புகளாக உள்ளது.

Readmore: மீண்டும் மீண்டும்..! ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

Advertisement