"தமிழ்நாடு டெக்ஸ்டைல் துறையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்..!!" - EPS அறிக்கை
தமிழ்நாட்டு டெக்ஸ்டைல் துறையைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் கையை விட்டு வெளிநாட்டு முதலீடுகள்தான் வெளி மாநிலங்களுக்குச் செல்கிறது என்ற நிலையில், கடந்த ஜூலை மாதம் கடைசி வாரத்தில் மத்தியப் பிரதேச முதலமைச்சர், கோவை மற்றும் திருப்பூருக்கு நேரடியாக வருகை தந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TEA), தென்னிந்திய ஆலைகள் சங்கம் (SIMA) மற்றும் இந்திய பருத்தி கூட்டமைப்பு (ICF) ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
இதனால், உள் மாநில ஜவுளி முதலீடுகள் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் நிலையை இந்த திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. மேற்படி ஒப்பந்தங்களின்படி, மத்தியப் பிரதேசத்தில் பருத்தி வளர்ச்சி வாரியத்தை நிறுவிடவும், எக்ஸ்ட்ரா லாங் ஸ்டேபிள் (ELS) பருத்தி உற்பத்தி மற்றும் பரப்பளவை அதிகரிக்கவும், மத்தியப் பிரதேசத்தின் ஆடைத் தொழிலுக்கான முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பதோடு, ஆடை உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சியை எளிதாக்கவும், திறன் மேம்பாடு வசதிகளில் ஆலோசனை வழங்கவும், ஆடை கிளஸ்டர் வடிவமைப்பிற்கான ஊக்கம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் SIMA மற்றும் ICF உடன் இணைந்து செயல்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக ஜவுளி கூட்டமைப்பு தனது விரிவாக்கப் பணிகளை வெளி மாநிலங்களுக்கு மாற்றுவதற்கு ஒருசில முக்கியக் காரணங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். ‘வெளிநாடுகளில் இருந்து முதலீட்டினை ஈர்க்கிறோம்’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நிர்வாகத் திறனற்ற விளம்பர திமுக அரசு, இனியாவது தூக்கத்தில் இருந்து விழித்து, முதலில் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக தொழில் நிறுவனங்கள், இங்கேயே தொழில் துவங்குவதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவதோடு; தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ‘கோயம்புத்தூர்’ என்ற பெயரை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் வகையில் டெக்ஸ்டைல் துறையினைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகிறேன்.
Read more ; இந்துக்களுக்கு எதிரானதாக மாறிய பங்களாதேஷ் போராட்டம்..!! இந்திய-வங்காளதேச எல்லையில் உச்ச கட்ட பாதுகாப்பு!!