சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்.. விஜய் அரசியலுக்கு வர இதுதான் காரணமா? முன்னாள் அமைச்சர் சொன்ன மேட்டர்..
2021-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றிய பின்னர், உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. குறிப்பாக தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் பெரிய படங்கள் அனைத்தையும் அந்நிறுவனமே கைப்பற்றி ரிலீஸ் செய்து வந்தது. அதிலும் கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் அந்நிறுவனம் வெளியிட்ட படங்கள் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் லாபத்தை ஈட்டியதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் அஜித், விஜய், சூர்யா, கமல், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களின் படங்கள் என்றால் அதை ரெட் ஜெயண்ட் தான் வெளியிடும் என்கிற நிலை இருந்த நிலையில், அதிலிருந்து முதல் ஆளாக வெளிவந்த ஹீரோ என்றால் அது தளபதி விஜய் தான். அவர் நடித்த பீஸ்ட் படத்துக்கு பின்னர் ரெட் ஜெயண்ட் வசம் தன் படத்தை கொடுப்பதை தவிர்த்து வருகிறார். இருப்பினும் விஜய் படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களிடம் இருந்து ஓரிரு ஏரியா ரிலீஸ் உரிமையை மட்டும் கைப்பற்றி ரெட் ஜெயண்ட் வெளியிட்டு வந்தது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஒரு நிகழ்ச்சியில் விஜய் அரசியலுக்கு வர ரெட் ஜெயண்ட் தான் காரணம் எனக் கூறியுள்ளார். அவர் பேசுகையில், "சினிமாத் துறையை ஓட்டுமொத்தமாக உதயநிதி ஸ்டாலின் ஆக்கிரமித்திருக்கிறார் . ரெட் ஜெயன்ட் மூவிஸைக் கேட்காமல் இன்று எந்த ஒரு படத்தையும் வெளியிட முடியாது. விஜய் என்ற ஒருவர் இன்றைக்கு அரசியலுக்கு வருகிறார் என்றால் அதற்குக் காரணமே ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான். ஏன்னென்றால் அவ்வளவு அக்கிரமங்களைச் செய்திருக்கிறார்கள்.
விஜய் மாநாடு நடத்தும்போது 'மது ஒழிப்பு கொள்கையை கொண்டுவருவேன். தமிழ்நாட்டில் மதுவை ஒழிப்பேன். நான் முதலமைச்சர் ஆகி போடும் முதல் கையெழுத்து அது தொடர்பாகத்தான் இருக்கும்' என்று சொல்லப்போகிறார். அதை உளவுத்துறை மூலமாக தெரிந்துகொண்டதால்தான் விசிக மூலமாக ஸ்டாலின் மதுஒழிப்பு மாநாட்டை நரித்தனமாக செய்துக்கொண்டிருக்கிறார். ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தி.மு.கவிடம் போய் கேட்க முடியுமா? அடுத்த முறை இரண்டு சீட்டுகள்கூட விசிக-விற்கு தர மாட்டார்கள்" என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசியுள்ளார்.