முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'மறந்து போன திண்ணை வீடுகள்!!' தொலைந்து போன சந்தோஷம்!!

11:18 AM May 31, 2024 IST | Mari Thangam
Advertisement

சென்ற நூற்றாண்டின் பெரும்பகுதிக் காலம் வரையில் ஒவ்வொரு வீட்டிலும் நாம் காணக்கூடிய முக்கியமான கட்டுமானம் திண்ணை. சிறிய ஓட்டு வீடென்றால் அதற்கேற்ற அளவில் சிறியதாகவும், பெரிய ஜமீன்தார் பாணி வீடுகளாயிருந்தால் ஏறக்குறைய பெரிய அளவுக்கும் திண்ணைகள் கட்டப்பட்டிருக்கும்.

Advertisement

அந்தக் காலத்தில் தெருக்கள் எப்படி இருந்தன என நினைத்துப் பார்த்தால், தெருக்கள் மக்களின் நடமாட்டங்களால், திண்ணைக் கூட்டங்களால் நிறைந்திருந்தன. வீடுகளுக்குள் ஒரு இணைப்பு இருந்தது. தனிவீட்டிற்கும் பொது வெளிக்குமான இடைவெளிகள் குறைவாகவே இருந்தன. நெருக்கடி மிக்க நகரங்கள், அதன் தெருக்களிலும் மக்கள் கூடிப்பேசி அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.

வீட்டு விசேஷங்களுக்கு வருகை தரும் உறவினர்களையும், அன்றாடம் சந்திக்க வீடு தேடி வருகின்ற ஊர்ப் பெரிய மனிதர்களையும் நண்பர்களையும் சந்திக்கக் கூடிய வரவேற்பறையாக அந்தக் காலத்தில் பயன்பட்டவை திண்ணைகள்தான். காய்கறி, தயிர், நெய், துணிமணிகள் போன்றவற்றைத் தலைச்சுமையாகக் கொண்டுவந்து விற்பனை செய்கிறவர்களின் வியாபாரத் தலமும் திண்ணைகளே. வயசாளி களின் வம்புப் பேச்சுக்கும், மாமியார் களின் குத்தல் பேச்சுகளுக்கும் திண்ணைகளே வசந்த மாளிகை.

கண்ணாமூச்சி, தாயக்கட்டை, ஏழு கல் விளையாட்டு, பரமபதம், பல்லாங்குழி ஆகியவையுடன் 1970-களில் கேரம் போர்டு, செஸ் போன்றவற்றையும் சிறுவர்களும் சிறுமிகளும் தத்தம் வீட்டுத்திண்ணைகளிலோ அல்லது தங்கள் நண்பர்களின் வீட்டுத் திண்ணைகளிலோ ஆடிக் களித்தார்கள்.

வெயில் கால இரவுகளில் காற்றாடப் படுத்துறங்கும் கட்டிலாகவும் திண்ணைகள் பயன்பட்டன. திண்ணைகளால் இன்னொரு பயன்பாடும் உண்டு. கோயில் திருவிழாக்களைக் காணவும், உறவுகளைப் பார்க்கவும் கால்நடையாக ஊர்விட்டு ஊர் செல்லும் வழிப்போக்கர்கள் ஓய்வெடுக்கும் சத்திக்ரமாகவும் திண்ணைகள் விளங்கின. வசதியுள்ள வீடுகள் என்றால் வழிப்போக்கர்கள் தங்கும் அந்தத் திண்ணையே அவர்களுக்கான அன்னதானச் சத்திரமாகவும் மாறிவிடும்.

திண்ணை என்பது வெறும் கல்லையும் மண்ணையும் இழைத்துக் கட்டப்பட்ட உட்காருமிடம் அல்ல. அது மனித நேயத்தின் அடையாளம். திண்ணை என்பது வீட்டில் வசிப்போருக்கு மட்டும் உரியதல்ல; மழையிலும் வெயிலிலும் யாத்திரை செல்லும் தேசாந்திரிகள் உட்கார்ந்து இளைப்பாறிச் செல்லக் கட்டப்பட்டவை. அந்தக் காலத்தில் திண்ணைகளில் வீட்டாரின் அனுமதி இன்றிப் படுத்துறங்கும் பண்டாரங்களையும் பரதேசிகளையும் காணலாம். திண்ணையில் இருக்கும் அந்நியரின் பசி தீர்த்த பின்னர் தாம் புசிக்கும் நல்லோர் வாழ்ந்த காலம் அது.

மனிதர்கள் எப்போதுமே சமூகம், இயற்கையின் ஒரு அங்கமே. இயற்கையுடனும் சமூகத்துடனும் இருக்கும் தொடர்பு நமது நலமான வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவரும் நமது நவீன நகரங்ளில் வீதிகளுக்கும் வீடுகளுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் புதிய சுற்றுச்சூழலை நாம் திட்டமிட வேண்டும். நவீன குடியிருப்பு வாசிகள் சமூகத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளும் முயற்சியை வீதிகளில் இருந்து தொடங்க வேண்டும்.

Read more ; சுழன்று கொண்டே இருக்கும் பூமி!… கடலில் பாயும் நீர் ஏன் பூமி முழுவதும் பரவுவதில்லை?

Tags :
#திண்ணை#திண்ணைவீடுhappinessPaddytraditionvillageகிராமம்
Advertisement
Next Article