இனி புதிய 'X' பயனர்கள் பதிவு போட கட்டணம்..! எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!
டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளராக இருப்பவர், எலான் மஸ்க். இவர், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தைக் கைப்பற்றியது முதல், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். ஆட்குறைப்பு, பெயர் மாற்றம், கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது எலான் மஸ்க் தனது Xல் ஒரு புதிய கட்டண சேவையை கொண்டு வருகிறார்.
அதன்படி, எக்ஸ் தளத்தில் போஸ்ட் போடுவதற்கும், லைக் போடுவதற்கும், கமெண்ட் செய்வதற்கும் வருடாந்திர கட்டணத்தை செலுத்த வேண்டும். தேவையற்ற போஸ்ட் மற்றும் ஸ்பேம் போன்ற சிக்கல்களை தவிர்க்க மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், X தளத்திற்கு புதிதாக வருபவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதே அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஒரே வழி என்று அவர் கருதுகிறார்.
ட்விட்டரில் எலான்மஸ்க் கொண்டு வந்த பெயர்மாற்றம் லோகோ மாற்றம் உள்ளிட்டவை பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எக்ஸ் பயனர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்த கட்டண மாறுபாடு எப்போது அமலாகும் என்பது குறித்து தெரியவில்லை,
வருடாந்தரக் கட்டணம் எவ்வளவு இருக்கும் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் புதிய பயனர்களுக்கு ஆண்டு முழுவதுக்கும் $1 (சுமார் ரூ.82) வசூலிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. X ஏற்கனவே அதன் பிரீமியம் சந்தாவை வெவ்வேறு வகைகளில் வழங்குகிறது, இதில் பிரீமியம்+ பயனர்களுக்கான Grok AI ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.