இரவில் தூக்கத்தை கெடுக்கும் உணவுகள்...! மறந்தும் சாப்பிடாதீங்க..!
தமிழர்கள் மத்தியில் உண்ணும் உணவு முறையில் ஒரு நம்பிக்கை பழங்காலமாகப் பின்பற்றப்படுகிறது. அதாவது கிழக்கு நோக்கிச் சாப்பிட்டால் ஆயுள் வளரும். தெற்கு நோக்கி சாப்பிட்டால் புகழ் பெருகும், மேற்கு நோக்கிச் சாப்பிட்டால் செல்வம் வளரும், வடக்கு நோக்கிச் சாப்பிடக்கூடாது. என்பதே அந்த நம்பிக்கையாகும்.
நம் உணவு முறையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை உண்பதே போதுமானது. எனினும் பழக்கத்தை மாற்ற இயலாதவர்கள் மூன்று முறை உண்ணலாம். சாப்பிட்ட சாப்பாடு வெளிவரும் வண்ணம் வயிறு முட்டச் சாப்பிடக்கூடாது. வயிற்றில் பாதியளவு உணவு, கால்பகுதி தண்ணீர், அடுத்த கால்பகுதி காற்றின் வருகைக்கு ஏற்றபடி வயிற்றில் இடம்விட்டுச் சாப்பிடுவதே மித உணவுப் பழக்கமாகும்.
குறிப்பாக இரவு உணவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இரவு உணவை அலட்சியப்படுத்தினால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல், அஜீரணம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என எச்சரித்தார்.
வறுத்த உணவுகள் கூடாது
சிலர் இரவில் எண்ணெயில் பொரித்த பஜ்ஜி, பக்கோடா, பூரி போன்ற உணவுகளை சாப்பிடுவார்கள். பொரித்த உணவை இரவில் எடுத்தால்.. உடல் நலம் கெடும்.
எண்ணெயில் பொரித்த உணவு கனமானது மற்றும் ஜீரணமாக நீண்ட நேரம் எடுக்கும். இது தவிர, இதனால் உடலில் நச்சுகள் சேரும். இரவில் எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
தயிர்
தயிரில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. தயிரில் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை அளிக்கிறது. தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் வயிற்றுக்கு நல்லது. ஆனால், இரவில் தயிர் சாப்பிட வேண்டாம் என்று ஆயுர்வேத நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தயிர் கனமானது, ஜீரணிக்க நேரம் எடுக்கும். குமட்டல், நெஞ்சு இறுக்கம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தயிரில் துவர்ப்பு தன்மை உள்ளது. குறிப்பாக குளிர்காலத்தில் இரவில் தயிர் சாப்பிட்டால், சளி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பழங்கள்
பழங்களை அதிகம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதை இரவில் சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள். அவை லேசானதாகவும் வயிற்றுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கும். பழங்களை இரவில் சாப்பிட்டால் சளி மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
தக்காளி: அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அமிலங்கள் தக்காளியில் அதிகளவில் இருப்பதால் அவை பின் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இரவு நேரங்களில் தக்காளி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
வெங்காயம்: வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல. இரவு நேரத்தில் வெங்காயம் சேர்த்த சாலட் சாப்பிடுவதால் வயிற்றில் வாயு உருவாகும். இதனால், உங்கள் தொண்டை பகுதியில் ரிஃப்ளக்ஸ் அமிலம் சுரக்கப்படும். வெங்காயம் குளிர்ச்சி என்பதால் இரவில் தவிர்ப்பது நல்லது.
ஐஸ்கிரீம்: இரவில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கிறது. இதனால் தூங்குவதற்குச் சிரமம் ஏற்படுகிறது. ஐஸ்கிரீமில் அதிகளவில் கலோரிகள், கொழுப்புகள், சர்க்கரைகள் உள்ளன. இவற்றை இரவில் உட்கொள்வதால் உடல் பருமன், மந்தமான உணர்வு, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு மற்றும் பல் சிறைவு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
காரமான உணவுகள்: இந்திய உணவுகள் பெரும்பாலும் காரம் நிறைந்ததாகவே இருக்கும். உணவில் அதிகப்படியான காரம் தூங்கும் திறனைக் குறைக்கிறது. இரவில் காரம் அதிகமாக இருக்கும் உணவுகள் அதிகம் உட்கொள்ளும்போது, நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்து, வயிற்றுப் புண்கள் உண்டாகும். அதிகப்படியான காரத்தை உணவுகளில் சேர்ப்பதினால் செரிமான பிரச்சினை ஏற்படுகிறது.
இனிப்பான உணவுகள்: அதிக சர்க்கரை உள்ள உணவு அல்லது தானியங்களை உட்கொள்வது ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கும் அல்லது குறைக்கும். இரவு உணவுக்குப் பிறகு சிறிது இனிப்புகளைச் சாப்பிட விரும்பினால், டார்க் சாக்லேட்டை உண்ண வேண்டாம். ஏனென்றால், இதில் சிறிது அளவு காஃபினும் உள்ளது.
மூன்று மணிநேர இடைவெளி அவசியம்
ஆயுர்வேதத்தின்படி, இரவில் லேசான ஊட்டச்சத்தை எடுக்க வேண்டும். ஆயுர்வேத நிபுணர்கள் இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். இந்த இடைவெளியில் உணவு முழுமையாக செரிக்கப்படுகிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இந்த விதிகளை பின்பற்றாவிட்டால், மலச்சிக்கல், வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம்.