தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி & காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...!
கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அடுத்தடுத்து உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவையில் 3 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில், புதுவைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் புதுவையில் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறுகையில், "கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று அமைச்சர் கூறினார்.
தமிழகத்தில் விடுமுறை:
கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பின்வரும் அறிவுரைகள் வழங்கினார்.
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் நாளை முதல் 18.10.2024 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.