பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் நீதிபதி.! தடை கற்களை தவிடு பொடியாக்கிய ஸ்ரீபதிக்கு குவியும் பாராட்டுக்கள்.!
ஸ்ரீபதி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, பழங்குடியின பிரிவை சார்ந்த பெண். இவர் தனது நீதிபதி கனவை மெய்ப்பித்திருக்கிறார். பழங்குடியின சமூகத்தில் வந்த முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை இவர் பெற்றிருக்கிறார். விரைவில் ஆறு மாத நீதிபதி பயிற்சிக்கும் செல்லவிருக்கிறார்.
திருவண்ணாமலையில் இருக்கும் ஜவ்வாது மலையை அடுத்து இருக்கும் புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீபதி. இவர் கடந்த வருடம் நடைபெற்ற தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வை எழுதி இருந்தார். 22 வயது ஆன இவர் தற்போது அந்தத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆறு மாத கால நீதிபதி பயிற்சிக்கு செல்லவிருக்கிறார்.
ஜவ்வாது மலையை ஒட்டி இருக்கும் இவரது கிராமத்தில், அடிப்படை வசதிகள் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையிலும் ஸ்ரீபதியின் தாயும், அவரது கணவர் வெங்கட்ராமன் உறுதுணையாக நின்று, ஸ்ரீபதியின் கனவை மெய்ப்பட செய்திருக்கிறார்கள்.
ஸ்ரீபதி தேர்வு எழுதிய சம்பவம் மெய்சிலிர்க்க வைக்கக்கூடியது. தேர்வு இருக்கும் அதே தினத்தில் ஸ்ரீபதியின் பிரசவ தேதியும் இருந்தது. தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அவருக்கு குழந்தை பிறந்தது.
ஆயினும் தேர்வை எழுதியே ஆகவேண்டும் என்று உறுதியாக இருந்த ஸ்ரீபதிக்கு, அவரது குடும்பத்தினர்கள், ரூபாய் ஒரு லட்சம் வரை செலவு செய்து ஒரு காரை, சொகுசு வசதிகளுடன் மாற்றி, அதில் பாதுகாப்பாக ஸ்ரீபதியை சென்னைக்கு தேர்வு எழுத அழைத்து சென்று இருக்கிறார்கள். நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று ஊர் திரும்பிய இவருக்கு மாலை மரியாதையுடன், மேளதாளம் முழங்க, ஊர் மக்கள் வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ் வழியில் கல்வி பயின்ற இவர், தன் முன் இருந்த அனைத்து தடை கற்களையும் தகர்த்தெறிந்து, பழங்குடியினர் பிரிவில் வந்த, முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். இவரது சாதனை மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் விளங்கும் என்பதில் ஐயமில்லை.