”எதற்கெடுத்தாலும் அபராதம்”..!! அடுக்குமாடி குடியிருப்புகளின் விதிகள் ரத்து..!! செல்லப்பிராணி வளர்ப்போர் செம குஷி..!! இந்த தீர்ப்பை கவனிச்சீங்களா..?
சென்னை திருவான்மியூரில் 'ஆர்ட்ரியம்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 78 வயதாகும் மனோரமா ஹிதேஷி என்பவர் வசித்து வருகிறார். இவர், அங்கு நாய் வளர்த்து வரும் நிலையில், அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் செல்லப்பிராணிகள் வளர்க்க கடும் கட்டுப்பாடுகளை விதித்து அமல்படுத்தியது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்பில் திறந்த வெளியில் செல்லப்பிராணிகள் மலம் கழித்தால், அதை 10 நிமிடங்களில் அவர்கள் சுத்தம் செய்ய வேண்டும். தவறினால், முதல்முறை ரூ.1,000, இரண்டாவது முறை ரூ.2,000, மூன்றாவது முறை ரூ.3,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதேபோல், அடுக்குமாடிகளில் பொது இடங்களில் செல்லப்பிராணிகள், சிறுநீர் கழித்தால், ரூ.250 முதல் ரூ.750 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் செல்லப்பிராணிகளை அழைத்து செல்ல, 'லிப்ட்'டை பயன்படுத்தக்கூடாது என்றும் 3 முறைக்கு மேல் விதிகளை பின்பற்றாத குடியிருப்பு வாசியின் பெயர் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் என்றும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆனால், இந்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ’ஆர்ட்ரியம்’ அடுக்குமாடி குடியிருப்பில் செல்லப்பிராணி வளர்த்து வரும் மனோரமா ஹிதேஷி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த விதிகள், விலங்குகள் நலவாரிய வழிகாட்டுதல்களுக்கு எதிராக உள்ளதாகவும், எனவே இந்த விதிகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் சென்னை 16-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2023ஆம் ஆண்டில் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து கூடுதல் சிட்டி சிவில் கோர்ட்டில் மனோரமா ஹிதேஷி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டை நீதிபதி எல்.ஆபிரகாம் லிங்கன் விசாரித்து வந்தார். விசாரணை முடிவில், நீதிபதி அளித்த தீர்ப்பில், “சங்கத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதற்காக இதுபோல அபராதம் விதிக்க முடியாது.
செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது என்பது மிரட்டலுக்குச் சமம். இதை தவிர்க்க வேண்டும். நாட்டின் சட்டங்களுக்கு முரணாகவும், எதிராகவும் இதுபோன்ற சங்கங்களின் பொதுக்குழுவில் முடிவு எடுக்க முடியாது. இதுபோன்ற கடுமையான விதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விதிகள் செல்லாது. அதை ரத்து செய்கிறேன். கீழ் கோர்ட்டு தீர்ப்பும் ரத்து செய்யப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.
Read More : ஆரம்பமே அதிரப்போகுது..!! இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை..!! எதிர்க்கட்சிகளின் பிளான் என்ன..?