cotton: விவசாயிகளுக்கு அதிர்ச்சி!… அதிகளவு பருத்தி கொள்முதல் செய்ய வேண்டாம்!… தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் அறிவிப்பு!
cotton: செயற்கை விலை ஏற்றம் காரணமாக பருத்தி விலை ஒரு கேண்டி(356 கிலோ) ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.62 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்றும் தொழில்முனைவோர் அதிகளவு பருத்தி கொள்முதல் செய்ய வேண்டாம் எனவும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சைமா தலைவர்சுந்தரராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கூடுதல் நீண்ட இழை பருத்திகளைத் தவிர பிற பருத்தி வகைகள் மீது விதிக்கப்பட்டுள்ள 11 சதவீதம் இறக்குமதி வரியின் காரணமாக நூற்பாலைகள் பருத்தி சீசன்அல்லாத காலத்தில் வர்த்தகர்களையே நம்பியுள்ளன. பருத்தி மீதான குறைந்தபட்ச ஆதரவு விலை உயரும் போதும்,உள்நாட்டு பருத்தி விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக உள்ள போதும் நிலைமையை கட்டுப்படுத்த இந்திய பருத்திக் கழகம் தலையிடும். இருப்பினும் நிலைமை மோசமடைகிறது.
தனியார் வர்த்தகர்களுடன் ஒப்பிடும்போது இந்திய பருத்தி கழகத்திற்கான கொள்முதல் மற்றும் உற்பத்தி செலவு சுமார் 5 சதவீதம் அதிகமாக இருப்பதால், குறைந்தபட்ச விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பருத்தியின் பலனை விவசாயிகள் பெறாமல் பன்னாட்டு வணிகர்கள் பயன்பெறும் நிலை உள்ளது. தொடர்ச்சியாக அரசு பல நடவடிக்கை மேற்கொள்ளும்போதும் பருத்தி விலையை செயற்கையாக உயர்த்துவது வழக்கமான அம்சமாகிவிட்டது.
பருத்தி விலை கடந்த 15 நாட்களில், 10 முதல் 12 சதவீதம் அதிகரித்து, ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தி சங்கிலியை பீதிக்கு உள்ளாக்கியுள்ளது. சங்கர்-6 ரக பருத்தியின் விலை ஒரு கேண்டி ரூ.55,300 என்று இருந்த நிலையில், தற்போது ரூ.62,000-ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் 2024 பருத்தி சீசனில் ஆஸ்திரேலியாவின் உற்பத்தி 4.7 மில்லியன் பேல்களாக (ஒரு பேல் இந்தியாவில் 170 கிலோ) உயரும் என்றும் சந்தை வரத்து மே 2024 முதல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, உலகில் உள்ள ஆலைகளுக்கான பருத்தி ஜூலைக்குபிறகு போதுமான அளவில் இருக்கும் என்று தொழில்துறையினர் எதிர்பார்த்துள்ளனர். நூற்பாலைகள் அவசரப்பட்டு பருத்தி வாங்குவதை தவிர்க்க வேண்டும். 2022-ம்ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை அனைத்து பருத்தி வகைகளுக்கும் 11 சதவீத இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளித்தது போன்று மீண்டும் வரி விலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.