டெல்லி போராட்டத்தில் பலியான விவசாயி.! கண்ணீர் புகை தாக்குதலால் மரணம் அடைந்தாரா.?… வெளியான அதிர்ச்சி தகவல்.!
கடந்த 2020 ஆம் வருடம் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் போது விலை பொருட்களுக்கு ஆதார விலை கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்தனர். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவை தவிர விவசாய கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பயிர் காப்பீட்டு திட்டம் மற்றும் மின்சார சட்ட திருத்த மசோதா ரத்து போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் பிப்ரவரி 13ஆம் தேதி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வருகிறது. இது தொடர்பாக இரண்டு மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தியும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து விவசாயிகள் டெல்லி நோக்கி செல்ல தொடங்கினார். இவர்களை கட்டுப்படுத்துவதற்காக டெல்லியின் எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கான்கிரீட் தடுப்புகள் மற்றும் முள் வேலிகள் அமைக்கப்பட்டு ஏராளமான பாதுகாப்பு படையினரும் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தடைகளை மீறி நுழைபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாய சங்கங்கள் கிராமின் பாரத் பந்த் என்ற பெயரில் நாடு முழுவதும் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தனர். விவசாயம் மற்றும் விவசாய தொழிலில் ஈடுபடுபவர்கள் இன்று வேலையை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் 12 மணியிலிருந்து 4 மணி வரை சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவதாகவும் அறிவித்தனர். இன்று நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று டெல்லியில் நடைபெற்ற பாரத் பந்த் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஜியான் சிங்(78) என்பவர் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. போராட்டக்காரர்களை கலைப்பதற்காக காவல்துறை வீசிய கண்ணீர் புகையை சுவாசித்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாரடைப்பால் மரணம் அடைந்ததாக செய்திகள் தெரிவித்துள்ளது. விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் ஒருவர் மரணம் அடைந்திருப்பது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.