அசத்திய மருத்துவர்கள்..!! சிறுவனின் நுரையீரலில் சிக்கியிருந்த தையல் ஊசியை எடுக்க புதுமையான சிகிச்சை..!!
டெல்லியை சேர்ந்த 7 வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கிய ஊசியை காந்தத்தின் உதவியோடு வெற்றிகரமாக வெளியில் எடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 1ஆம் தேதி 7 வயது சிறுவன் ஒருவன் மூக்கில் ரத்தகசிவு மற்றும் இருமலுடன் அனுமதிக்கப்பட்டான். சிறுவனின் உடல்நல கோளாறு என்னவென்று கண்டறிய கதிரியக்க சோதனை செய்து பார்த்ததில், வயிற்றில் தையல் ஊசி இருந்தது தெரியவந்துள்ளது. சிறுவனின் வயிற்றில் இருந்த ஊசி எவ்வாறு வெளியேற்றப்பட்டது, அதற்காக என்ன மருத்துவ முறை கையாளப்பட்டது என்று டாக்டர் விஷேஷ் ஜெயின், டாக்டர் தேவேந்திர குமார் யாதவ், தொழிநுட்ப அதிகாரி சத்யபிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழு விவரித்தனர்.
அந்த தகவலின்படி, "1ஆம் தேதி தீவிர இருமல் மற்றும் மூக்கில் ரத்தகசிவு காரணமாக மருத்துவமனையில் அந்த சிறுவன் அனுமதிக்கப்பட்டார். சிறுவனின் உடல்நல குறைவுக்கான காரணம் என்னவென்று கண்டறிய x ray செய்து பார்த்ததில் சிறுவனின் இடது நுரையீரலில் 4 செமீ அளவிலான தையல் ஊசி ஒன்று இருப்பது தெரியவந்தது.
இந்த ஊசி எப்படி அச்சிறுவனின் நுரையீரலுக்குள் சென்றது என்ற தகவலை சிறுவனின் குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை. ஆகையால், இந்த ஊசியை வழக்கமான மருத்துவமுறை கொண்டு அகற்றுவது மிகவும் ஆபத்தானதாக அமையும். ஏனென்றால், ஊசி சிக்கி கொண்டுள்ள பகுதி மிகவும் சிறியது. எனவே, இதற்கு புதுமையான மருத்துவமுறையை கையாளுவதே சரியான தீர்வாக அமையும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இதற்காக 4.மி,மீ அகலம் மற்றும் 1.5 மி.மீ பருமன் கொண்ட காந்தம் வாங்கி வரப்பட்டு அத்துடன் காந்த நூலை பொருத்தி, ஒரே ஒரு தாடையுடன் ஊடிய சிறப்பு கருவியை கொண்டு இந்த ஊசியை வெளியேற்ற திட்டமிடப்பட்டது. மேலும் நுரையீரலில் ஊசி இருக்கும் இருப்பிடத்தை கண்டறிய எண்டோஸ்கோபிக் செயல்முறை மேற்கொள்ளப்பட்டு சுவாசக் குழாயின் வழியாக இக்காந்தமானது செலுத்தப்பட்டது.
உள்ளே சென்ற காந்தம் உடனடியாக ஊசியை பற்றி பிடிக்கவே சுமூகமாக வெளியில் வெற்றிகரமாக எடுக்கப்பட்டது தையல் ஊசி. இப்புதிய முறை வெற்றியடையாமல் இருந்திருந்தால் நிச்சயம் மார்பையும் நுரையீரலையும் திறந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஊசியானது வெளியேற்றப்பட்டிருக்கும்" என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.