”இனி வீட்டு உபயோக சிலிண்டரில் QR கோடு”..!! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய செய்தி..!!
சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு ஒரு முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, வரும் நாட்களில் கியூஆர் குறியீடு உடன் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். கியூஆர் குறியீடு மூலம் சட்டவிரோத சந்தையை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள அவர், சிலிண்டர்கள் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்த இது உதவும் என்று கூறியிருக்கிறார்.
கியூஆர் குறியீடு அம்சம் சமையல் எரிவாயு சிலிண்டர் விதிகளில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (PESO) வழங்கும் உரிமங்களைப் பொறுத்தவரை, பெண் தொழில்முனைவோருக்கு 80% தள்ளுபடியும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு 50% தள்ளுபடியும் கிடைக்கும்.
பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்புக்கு பெட்ரோல் பம்புகள் 30-50 மீட்டர் இடைபட்ட தூரத்தில் கூட செயல்படும் வகையில், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை வடிவமைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.