For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்..!! ஐகோர்ட் உத்தரவு..!!

07:44 AM Nov 17, 2023 IST | 1newsnationuser6
கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்     ஐகோர்ட் உத்தரவு
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1.021 மருத்துவர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம், கடந்த 2022 அக்.11ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. கடந்த ஏப்ரலில் தேர்வு நடத்தப்பட்டது. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் அரசு மருத்துவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கவும், கோவிட் பணிச்சான்று வழங்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், கொரோனா காலகட்டத்தில் தாங்களும் பணியாற்றிய நிலையில், அரசு மருத்துவர்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்குவது பாரபட்சமானது என தனியார் மருத்துவர்களும், தங்களுக்கும் மதிப்பெண்ணில் சலுகை வழங்க வேண்டும் என பயிற்சி மருத்துவ மேற்படிப்பு மாணவர்களும் உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், ''கொரோனா காலகட்டத்தில் 84% நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற்றனர். தனியார் மருத்துவர்கள் கொரோனா பணியில் ஈடுபட்டனரா? என்பதை சரிபார்க்க எந்த நடைமுறையும் இல்லை. தனியார் மருத்துவர்களும் எந்த ஆவணங்களையும் ஆதாரமாக தாக்கல் செய்யவில்லை. பயிற்சி மருத்துவ மேற்படிப்பு மாணவர்களை பொறுத்தமட்டில் 36 மாதங்கள் பணியாற்றிய காலத்தை பயிற்சி காலமாகவே கருத முடியும். எனவே, அவர்களுக்கும் கூடுதல் மதிப்பெண் வழங்க முடியாது'' என தெரிவிக்கப்பட்டது.

தனியார் மருத்துவர்கள் வழக்கை பொறுத்தவரை அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், ''அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் முடிவில் தவறில்லை. அதேநேரம் பயிற்சி மருத்துவ மேற்படிப்பு மாணவர்களும், அரசு மருத்துவர்களுக்கு இணையாக உயிரை துச்சமாக மதித்து பணியாற்றியுள்ளனர் என்பதால் அவர்களுக்கும் கூடுதல் மதிப்பெண் பெற உரிமை உள்ளது. எனவே, பயிற்சி மருத்துவர்கள், 10 நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி கோவிட் பணிச் சான்றிதழ் கோரலாம். அடுத்த 5 நாட்களில் அவர்களுக்கு அந்த சான்றிதழை வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags :
Advertisement