இந்திய அரசின் அபார முயற்சி.! முன்னாள் கடற்படை வீரர்களின் மரண தண்டனை ரத்து.! வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்தி.!
கத்தார் நாட்டில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்திய அரசு செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து இந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக தகவலை வெளியிட்டிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படை வீரர்களுடனும் அவர்களது குடும்பத்துடனும் வழக்கு மற்றும் அதன் விவரங்கள் குறித்து தொடர்ந்து கேட்டு அறிவதாக தெரிவித்திருக்கிறது. மேலும் கத்தார் நீதிமன்றத்தின் முழுமையான தண்டனை விபரங்கள் குறித்த தகவலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
கத்தார் நாட்டில் இயங்கி வரும் குளோபல் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய கடற்படையைச் சார்ந்த 8 முன்னாள் வீரர்கள் அந்த நாட்டு அரசால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் இஸ்ரேல் நிறுவனத்திற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதோடு அவர்களுக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக இந்தியா மேல்முறையீடு செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களது மரண தண்டனை தற்போது ரத்து செய்யப்பட்டு சிறை தண்டனையாக மாற்றப்பட்டிருப்பதாக கத்தார் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பான விஷயங்கள் அனைத்தும் மிகவும் ரகசியமாக இருப்பதால் அதனைப் பற்றிய பிற விபரங்களை தற்போது தெரிவிக்க முடியாது எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளது.