Parliament Election: பிஜேபியில் இணையும் முன்னாள் முதல்வர்.? கலக்கத்தில் காங்கிரஸ்.!
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வுகளில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் முக்கிய தலைவர்கள் கட்சி மாறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியது. இந்தக் கூட்டணியில் இடம் பெற்ற ஐக்கிய ஜனதா தளம் திடீரென விலகியது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகி பிஜேபியில் ஐக்கியமாவது தொடர்ந்து நடைபெறுகிறது .
சமீபத்தில் மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான அசோக் சவான் கட்சியிலிருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மத்திய பிரதேச மாநிலத்தில் மற்றொரு முன்னாள் முதல்வர் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அந்தக் கட்சிக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
மத்திய பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கமல்நாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் அவர் பாரதிய ஜனதா கட்சியில் அவரது மகன் முகுல்நாத் முக்கிய பங்காற்றியதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் தொடர்பாக கமல் நாத் இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.