’கட்சியை விட்டு விலகினாலும் அதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன்’..!! ’சீமான் மீது கோபம்’..? மவுனம் கலைத்த காளியம்மாள்..!!
தான் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலைப் பற்றி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த மாதம் காளியம்மாளைப் பற்றி சீமான் பேசிய ஆடியோ பதிவு ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், 'காளியம்மாளை ஒரு பிசிறு. அதைத் தட்டிவிட்டால் சரியாகப் போய்விடும்' என்று சீமான்ம் பேசியிருந்தார். இந்த ஆடியோ லீக் ஆன பிறகு காளியம்மாள் முற்றிலும் அமைதியானார். சமீபத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சி ஒன்று காளியம்மாள் விஜய் கட்சியில் இணைய இருப்பதாகச் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில்தான் காளியம்மாள் தலைமறைவு வாழ்க்கையில் இருந்து வெளியே வந்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “ஆடியோ லீக்கான பிறகு நான் கொஞ்சம் மவுனமாக இருந்தது உண்மைதான். பேச வேண்டாமே என இருந்தேன். வீட்டில் சில வேலைகள் இருந்ததால், அதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நான் பேசாததை வைத்துக் கொண்டு என்னைப் பற்றி விதவிதமாக வீடியோக்களை பலரும் வெளியிட்டனர்.
அதில் 'தமிழா தமிழா' பாண்டியன் என்று ஒருவர். நான் பாஜகவில் இணையப் போவதாக ஒரு யூடியூப்பில் பேசியிருந்தார். அதற்காக அண்ணாமலையிடம் பாஜக தேசிய தலைமை ராஜினாமா கடிதம் வாங்கிவிட்டது. அவருக்குப் பதிலாக காளியம்மாளை பாஜக மாநில தலைவராக அறிவிக்கவுள்ளதாக கூறியிருந்தார். அவர் பேசிய அந்த வீடியோவை கண்டிப்பாகப் பார்க்கவும் என்று சொல்லி அனுப்பி இருந்தார்கள். அதனால் அதைப் பார்த்தேன். இவரைப் போன்று கதைவசனம் எழுதக் கூடிய ஆட்களை எப்படி பாரதிராஜா, வெற்றிமாறன் ஆகியோர் விட்டார்கள் என்றே புரியவில்லை.
வெளிப்படையாகச் சொல்கிறேன். ஒரு பாஜகவினர் கூட என்னை அணுகி கட்சியில் சேருமாறு பேசியதே இல்லை. அதுதான் உண்மை. இன்னொரு யூடியூபர் எனக்கு 30 கோடி பேரம் பேசிவிட்டார்கள். எனக்கு ஃபார்ச்சூனர் கார் ஒன்றும் கொடுக்க இருக்கிறார்கள் என்று பேசியிருந்தார். ஒருவர் நான் சிங்கப்பூர் போவதாகவும் அங்கே அதிமுக முன்னாள் அமைச்சர் அங்கே வரப் போவதாகவும். அங்கேயே பேரம் நடத்தப்பட இருக்கிறது என்று வீடியோ போட்டிருந்தார்.
வெளிப்படையாகச் சொல்லப் போனால் பாஜகவைத் தவிர்த்து அனைத்து கட்சியினரும் என்னிடம் பேசினார்கள். அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், சீமான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. அதற்காக அரசியலைவிட்டு நீங்கள் வெளியேறிவிட வேண்டாம். இன்னும் மனவலிமையோடு போராடுகள் என்றுதான் அறிவுரை கூறினார்கள். யாரும் கட்சிக்கு வரச் சொல்லி பேரம் பேசவில்லை.
2019இல் நாம் தமிழர் கட்சியில் இணைந்தேன். 5 ஆண்டுகளாகக் கட்சியில் இருக்கிறேன். இதுவரை ஒருமுறை கூட என்னைச் சீமான் கோபமாகத் திட்டியதே இல்லை. அவர் என்னை குலத் தெய்வம் என்று கூடச் சொல்லியிருக்கிறார். பலமுறை மேடைகளை என்னைப் பாராட்டி இருக்கிறார். இந்த ஆடியோ பதிவு வெளியான பிறகு 'நான் நேரில் உன்னிடம் பேசுகிறேன்' என்று சீமான் ஒரு குரல் பதிவு போட்டிருந்தார். சமீபத்தில் சென்னையில் நடக்கும் கூட்டத்திற்கும் கட்சி சார்பில் அழைப்பு வந்தது.
அன்று ஆடி அமாவாசை. வீட்டில் மூத்தோர் படையல். எனவே, போக முடியவில்லை. ஆகஸ்ட் 12ஆம் தேதி என் பிறந்தாள். அதற்கு தொலைப்பேசி செய்து வாழ்த்து சொன்னார். மீண்டும் எங்கள் ஊர் கோயிலுக்கு சாமி கும்பிட சீமான் வந்தார். அப்போது சென்று சந்தித்தேன். அதையொட்டி ஊரில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது அவருடன் அரை மணி நேரத்திற்கு மேல் அருகில் அமர்ந்து பேசினேன். பலவிதமாகப் பேசி வருகிறவர்களைப் பார்த்து நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்.
என்னுடைய பொருளாதாரத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவோ அல்லது நான் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காகவோ இந்த அரசியல் வாழ்க்கைக்கு நான் வரவில்லை. நான் மீனவ மக்களின் விடுதலைக்காக அரசியல் வந்தேன். அரசியலுக்குள் வந்த பிறகு தமிழினமே அப்படித்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். நான் கட்சியில் உறுதி எடுக்கும்போது இந்த நிலத்திற்காகப் பாடுபடுவேன் என்று சொன்னது வெறும் வார்த்தை அல்ல. அது உண்மை. நாம் தமிழர் அரசியல் களத்தில் என்னால் முடிந்தவரை முட்டி பார்ப்பேன். முட்ட முடியாத நிலைமை வந்தால் அப்போது நான் சொல்கிறேன். ஒருவேளை நாம் தமிழர் கட்சியை விட்டு விலகக் கூடிய நிலைமை வந்தால், அதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன்” என்று பேசியுள்ளார் காளியம்மாள்.
Read More : நகைப்பிரியர்களுக்கு செம குட் நியூஸ்..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! உடனே கிளம்புங்க..!!