"திமுக கூட்டணிக்குள் எடப்பாடியாரின் ஆட்டம்.." கலை கட்டத் தொடங்கும் பாராளுமன்றத் தேர்தல் களம்.!
முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2024 ஆம் வருட தேர்தலுக்கு புதிய வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக திமுக கூட்டணி கட்சிகளை உடைத்து அவற்றுடன் கூட்டணி அமைக்கும் பணியில் தீவிரம் காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முறிக்கப்பட்டது. கட்சித் தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று பாஜக உடனான கூட்டணியை முறித்ததாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சி நடத்திய மதச்சார்பற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார் எடப்பாடி பழனிச்சாமி . இனி ஒருபோதும் அதிமுக பாஜக உடன் சேராது எனவும் உறுதியளித்தார்.
இந்நிலையில் 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தலைமையில் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக திமுக கூட்டணியை உடைத்து அதில் இருக்கும் முக்கிய கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கு முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்த எடப்பாடி பழனிச்சாமி நன்றாக ஓய்வெடுத்து விட்டு சீக்கிரம் அரசியலுக்கு வருமாறு தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவம் நலம் விசாரிப்பாக பார்க்கப்பட்டாலும் அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்கிறது என அதிமுக கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் திமுக கூட்டணியில் இருக்கும் முக்கியமான கட்சி தலைவர் ஒருவருடன் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன் கூட்டணி குறித்து விவாதித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக போட்டியிடும். கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களே கிடைக்கும். இதனால் அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை தங்களுடன் இணைப்பதற்கு மாஸ்டர் பிளான் செய்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.