For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

போலி NCC முகாம்.. பின்னணியில் இருப்பது யார்? குற்றவாளிகளை காக்க முயற்சி செய்வது ஏன்? - EPS கேள்வி

Edappadi Palanichamy has issued a statement that there is suspicion in the deaths of both the father and son in the case of rape of schoolgirls by conducting a fake NCC camp in Krishnagiri.
03:37 PM Aug 23, 2024 IST | Mari Thangam
போலி ncc முகாம்   பின்னணியில் இருப்பது யார்  குற்றவாளிகளை காக்க முயற்சி செய்வது ஏன்    eps கேள்வி
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்சிசி முகாம் நடைபெற்றது. அதில், 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Advertisement

மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பயிற்சியாளர் சிவராமன் உள்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்., இச்சம்பவத்தில் கைதான போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உயிரிழந்தார்.  வழக்கில் தலைமறைவாக இருந்தபோது எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயன்ற நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, சிவராமனின் தந்தை அசோக்குமார், குடிபோதையில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த இரு மரணங்களில் சந்தேகம் இருப்பதாக கூறி, அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், காவல் துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு, காவல் துறையால் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று (ஆக.23) காலை மரணமடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

மேலும், அவரது தந்தை அசோக்குமார் என்பவரும் வியாழக்கிழமை இரவு மதுபோதையில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு தொடர் மரணங்களுமே, சந்தேகத்துக்கு இடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொது மக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.

போலி என்சிசி பயிற்சி முகாம்கள் எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது? இதுவரை எத்தனை முறை நடைபெற்றுள்ளது? கிருஷ்ணகிரி தவிர வேறு மாட்டங்களில் இதுபோல் போலி என்சிசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளனவா? சிவராமன் தவிர வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா? போலி என்சிசி முகாம்கள் நடத்தி அவர்களுக்கு என்சிசி சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளனவா?

போலி என்சிசி பயிற்சியாளர்களை மாணவிகளுக்கு பயிற்சியளிக்க அனுமதித்த பள்ளி நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் போன்ற பல சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடிய சிவராமன், தற்கொலை செய்து கொண்டது பொது மக்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.

ஏற்கெனவே, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை வழக்கில் சரணடைந்த விசாரணைக் குற்றவாளி ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட போது எழுந்த கேள்விகளுக்கும் திமுக அரசிடமிருந்து முழுமையான பதில் வரவில்லை. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான விடைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்,' என்று அவர் கூறியுள்ளார்.

Read more ; இன்ஸ்டாவில் பேசிய ஒரு மணி நேரத்தில் வாட்ஸ் அப்பில் வந்த நிர்வாண வீடியோ கால்..!! ரூ.2.50 லட்சத்தை இழந்த வங்கி ஊழியர்..!!

Tags :
Advertisement