ED ரெய்டு... அமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்...! திமுக வட்டாரத்தில் பரபரப்பு...!
துரைமுருகன், கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் 2 நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் விமானம் மூலம் டெல்லிக்கு சென்றுள்ளனர். துரைமுருகன், கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் 2 நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனை நடந்த நிலையில், அமைச்சரின் திடீர் டெல்லி பயணத்தால் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சி.ஆர்.பி.எப் காவலர்கள் பாதுகாப்புடன் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, துரைமுருகனுக்கு நெருங்கிய கட்சி பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன், இவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் வீடுகளில் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் சோதனை மேற்கொண்டனர். அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இருந்தார். எம்.பி. கதிர் ஆனந்த் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார்.
கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சென்றனர். துரைமுருகன் வீட்டில் அமைச்சரின் தனி அறை பூட்டியிருந்ததால் அந்த அறையின் பூட்டைஉடைக்க, இரும்பு கடப்பாரையை வீட்டினுள் கொண்டு சென்றனர். நள்ளிரவு வரை சோதனை நீடித்தது.
திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் அருகே காட்பாடியில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2019 மக்களவைத் தேர்தலில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, 2019 மார்ச் 30-ம் தேதி அமைச்சர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.10 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் பூஞ்சோலை சீனிவாசன், உறவினர் தாமோதரன் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ.11 கோடியே 51 லட்சத்து 800 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், சுமார் ரூ.9 கோடி 200 ரூபாய் புத்தம் புதிய நோட்டுகளாக இருந்தது. 2019-ல் வருமான வரி சோதனை நடந்த இடங்களில் தற்போது அமலாக்கத் துறை சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.