மீண்டும் அமலுக்கு வரும் ePass.!! ஊட்டி கொடைக்கானல் செல்வோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.!!
ஊட்டி மற்றும் கோடைகானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்(ePass) வழங்க வேண்டும் என திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகின்ற மே மாதம் 7-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை இ-பாஸ் வாகனங்களுக்கு மட்டுமே ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியாளர்கள் காணொளி மூலம் ஆஜராகினர். இந்த விசாரணையின் போது அரசு தரப்பு அறிக்கையை நீதிபதிகள் முன்பு சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் வந்து செல்லலாம் என்பது தொடர்பாக சென்னை ஐஐடி மற்றும் பெங்களூர் ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் உதகமண்டலத்திற்கு 1300 வேன்கள் உட்பட 20,000 வாகனங்கள் வந்து செல்வதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது . இத்தனை வாகனங்கள் வந்து சென்றால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு வனவிலங்குகளும் இயற்கை சூழலும் பாதிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள் மக்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ்(ePass) முறையை கடைப்பிடிக்க நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
இ-பாஸ் விண்ணப்பிக்கும் நபர்கள் எத்தனை நாள் தங்குவார்கள் எத்தனை பேர் வருகிறார்கள் எந்த மாதிரியான வாகனம் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்து இ-பாஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உள்ளூர் மக்களுக்கு இ-பாஸ் முறையில் இருந்து விலக்கு அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த இ-பாஸ் முறையை வருகின்ற மே மாதம் 7 ஆம் தேதியிலிருந்து 30-ஆம் தேதி வரை பின்பற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கோடை காலத்தில் அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்துவதற்கும் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.