போதிய பயணிகள் இல்லை... சென்னையில் இருந்து புறப்படும் 6 விமானங்கள் ரத்து..!!
போதிய பயணிகள் இல்லாததால், சென்னையில் இருந்து புதன்கிழமை புறப்படவிருந்த 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகினது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்து சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரம் நோக்கிச் செல்வதால், நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்தது. இதனால், பல்வேறு சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்ததால், சாலைப் போக்குவரத்து சில இடங்களைத் தவிர மற்ற பகுதிகளில் சீரானது. சென்னை மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களில் இயக்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, சேலம், ஷீரடி, மதுரை-சென்னை, ஷீரடி-சென்னை, சேலம்-சென்னை செல்லக் கூடிய 6 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை-மதுரை (காலை 6.55), சென்னை-சேலம் இண்டிகோ(காலை 10.35), சென்னை-ஷீரடி ஸ்பைஸ் ஜெட்(பிற்பகல் 2.40), மதுரை-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ்(காலை 10), ஷீரடி-சென்னை ஸ்பைஸ் ஜெட்(பிற்பகல் 1.40), சேலம்-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ்(மாலை 6) செல்லக் கூடிய 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Read more ; கனமழை எதிரொலி!. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்கள் ரத்து!. உதவி எண்கள் அறிவிப்பு!.