கோக் மட்டுமல்ல.. இந்த உணவுகளும் உங்கள் ஆயுளை குறைக்குமாம்.. எச்சரிக்கும் புதிய ஆய்வு...
உலகின் மிகவும் விரும்பப்படும் பானங்களில் ஒன்றாக கோக் உள்ளது. பெரும்பாலும் இளைஞர்களின் ஃபேவரைட் பானமாக இது உள்ளது. ஆனால் கோக் குடித்தால் உங்கள் ஆயுள் குறையும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மை தான். கோக் குடிப்பதால் 12 நிமிடங்கள் ஆயுள் குறையும் என்று சமீபத்திய ஆய்வு நிரூபித்துள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட, புதிய ஆய்வில் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் நமது ஆயுட்காலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்படி, சில தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் ஆயுளை குறைக்கும் என்பது தெரியவந்துள்ளது. உதாரணமாக, ஹாட் டாக் (Hot Dog) சாப்பிட்டால் 36 நிமிடங்கள் ஆயுள் குறையலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.. அதனுடன் நீங்கள் கோக்-ஐயும் சேர்த்து குடித்தால் உங்கள் ஆயுளில் மேலும் 12 நிமிடங்கள் குறையலாம்.
அதே போல் சாண்ட்விச்கள் மற்றும் முட்டைகள் ஆயுளில் இருந்து 13 நிமிடங்களை குறைப்பதாக கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் சீஸ் பர்கர்கள் 9 நிமிடங்களைக் குறைக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
எனினும் சில வகையான மீன்களை சாப்பிடுவது உங்கள் வாழ்க்கையில் 28 நிமிடங்களைச் சேர்க்கலாம் என்றும் ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது.
ஆய்வின் தலைவரான டாக்டர் ஆலிவியர் ஜோலியட் இதுகுறித்து பேசிய போது “ சிறந்த ஆரோக்கியத்திற்கு உணவுமுறை மாற்றங்கள் அவசியம் என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவு மாற்றங்கள் எவ்வளவு முக்கியம் என்பது தெளிவாக உள்ளது. நம் உணவில் செய்யப்படும் மாற்றங்கள் உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன” என்று தெரிவித்தார்.
எந்தெந்த உணவுகள் உங்கள் ஆயுளை குறைக்கலாம்?
ஹாட் டாக் - 36 நிமிடங்கள்
காலை உணவு சாண்ட்விச் - 13 நிமிடங்கள்
முட்டை - 13 நிமிடங்கள்
கோக் - 12 நிமிடங்கள்
சீஸ்பர்கர்கள் - 9 நிமிடங்கள்
பேக்கன் - 6 நிமிடங்கள்
பீட்சா, மாக்ரோனி மற்றும் சீஸ், ஹாட் டாக் மற்றும் கோக் போன்ற உணவுகள் மூலம் ஆயுட்காலம் குறைவதாக கண்டறியப்பட்டாலும், சில வகையான மீன்களை உணவில் சேர்ப்பது உங்கள் ஆயுளை நீட்டிக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் நாம் உட்கொள்வதை மிகவும் கவனத்துடன் அணுகுமாறு வலியுறுத்துகின்றனர்.
தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்கள் :
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (BMJ) தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் பற்றிய ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. இந்த உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது இதய நோய் தொடர்பான இறப்புக்கான 50% அதிக ஆபத்து அதிகம் என்பது கண்டறியப்பட்டது. பதட்டம் போன்ற மனநலப் பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்து 48-53% அதிகம் என்பதும் தெரியவந்தது.
தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளால் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான 12% அதிக ஆபத்து உள்ளது என்றும், இறப்பு ஆபத்து 21% அதிகம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. உடல் பருமன் மற்றும் இதய நோய் ஏறடுவதற்கான வாய்ப்பு 40-66% அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது.
இவை தவிர தூக்கப் பிரச்சனைகள், மனச்சோர்வு, ஆஸ்துமா, அதிக கொழுப்பு மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகள் ஆகியவையும் ஏற்படலாம். தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை மிதமான அளவில் சாப்பிடுவது தீங்கு விளைவிக்காது என்றாலும், சிறந்த நீண்ட கால ஆரோக்கியத்திற்காக பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Read More : ஒரு ஸ்பூன் போதும்..! புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கலாம்..