2031-ல் தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு வேலையே இருக்காது..! அண்ணாமலை பரபரப்பு கருத்து...
2031ல் தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு வேலை இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பை படிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டனிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், லண்டன் சென்றுள்ள அண்ணாமலை, அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ம் தேதி தமிழகம் திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 28-ம் தேதி தமிழகம் வரும் அண்ணாமலை, டிசம்பர் 1-ம் தேதி கோவையில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், பாஜகவின் ஓட்டு வங்கியை மேலும் பலப்படுத்த, கடந்த மக்களவைத் தேர்தலின் போது நடத்திய ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை போல, ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொண்டு கிராம மக்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டு உள்ளார்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த சித்தாந்தங்கள் காலாவதி ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை தேர்தல்கள் பறைசாற்றுகின்றன. தமிழகத்தில் 2026 என்பது கூட்டணி ஆட்சி தான். ஒரு திராவிட கட்சி ஓட்டு சதவீதம் 12க்கு கீழே குறைய வாய்ப்புள்ளது. அதன் தொண்டர்கள் எல்லோரும் வெளியே வருவர். அது காலத்தின் கட்டாயம். அது எந்த கட்சி என்பது உங்கள் யூகத்துக்கு விட்டு விடுகிறேன். வரும் 2026 தேர்தலில் இந்த சரிவு ஆரம்பமாகும்; 2031ல் தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு வேலை இருக்காது.