பாதுகாப்பான தீபாவளி.. பட்டாசு வெடிக்கும் போது கவனம்.. மறந்தும் இந்த தவறை செய்யாதீங்க..
தீபாவளி நாளில் பட்டாசு வெடித்தால்தான் பண்டிகை கொண்டாடிய மன திருப்தி ஏற்படும். வித விதமாக ரகம் ரகமாக பட்டாசுகள் இப்போது பல வண்ணங்களில் வான வேடிக்கை காட்டுகின்றன. கம்பி மத்தாப்புகள் இப்போதெல்லாம் பல வண்ணங்களில் வருகின்றன.
கைகளில் பிடித்து வெடிக்கும் பென்சில் வெடிகள் சில நேரங்களில் பட்டென வெடித்து காயத்தை ஏற்படுத்துகின்றன. சின்ன சின்ன வெடிகள் கூட எதிர்பாராத நேரத்தில் வெடித்து பதம் பார்த்து விடும். பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் நேரத்தில் வெடியினால் காயம் ஏற்பட்டால் மொத்த சந்தோஷத்தையும் கெடுத்து விடும். எனவே பட்டாசு வெடிக்கும் போது கவனம் மிக அவசியம். பட்டாசு வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை, கண் காயங்கள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..
கண்களுக்கு பாதுகாப்பு :
பட்டாசுகளை கொளுத்தும்போது கையளவு தூரத்தை பராமரிக்கவும். அருகில் நின்று கவனித்தீர்களென்றால் குறைந்தது 5 மீட்டர் தூரம் தள்ளி நிற்கவும். பட்டாசுகளை வெடிக்கச் செல்வதற்கு முன்பு உங்களது கான்டாக்ட் லென்சுகளை கண்களிலிருந்து அகற்றிவிடவும். உங்களது கண்களை ஒரு சிறப்பான வழியில் பாதுகாக்கக்கூடிய கண் கண்ணாடிகளை அதற்குப் பதிலாக பயன்படுத்தவும்.
பட்டாசு வெடித்து கண்களில் காயம் ஏற்பட்டால் முதலில் சுத்தமான துணியை நீரில் நனைத்து கண்களை துடைக்க வேண்டும். அதன் பிறகு கண்கள் மீது பருத்தி துணியை வைத்து மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். பட்டாசு மத்தாப்பினால் கண்களில் காயம் ஏற்பட்டால் உடனடியாக கண்களை தேய்க்கவோ அல்லது கண்களை சொறியவோ கூடாது. பாதிக்கப்பட்ட கண்ணை தேய்த்தால் அது இரத்தக் கசிவை மேலும் அதிகரிக்கக்கூடும் அல்லது காயத்தை மோசமாக்கக்கூடும்.
வெடி விபத்தினால் காயம் ஏற்பட்டால் உங்கள் கண்களையும், முகத்தையும் உடனடியாக கழுவுங்கள் கண்ணில் எரிச்சல் அல்லது அந்நியப் பொருள் இருக்குமானால், கண் இமைகளை நன்கு திறந்து வைத்து, தொடர்ச்சியாக நீரைக்கொண்டு கண்களை அலச வேண்டும். கண்களுக்குள் ஏதாவது வேதிப்பொருள் நுழைந்திருக்குமானால், 30 நிமிடங்களுக்கு நீரைக்கொண்டு உடனடியாக கண்களையும் மற்றும் கண் இமைகளுக்கு கீழேயும் நன்கு அலசவும். ஒரு கண் மருத்துவரிடம் உடனடியாக சிகிச்சைக்கு செல்லவும். கண்ணில் துகள் எதுவும் சிக்கியிருக்குமானால் அல்லது பெரிதாக இருக்குமானால் அதை நீங்களே அகற்ற முயற்சிக்காதீர்கள். கண்களை மூடிய நிலையில் வைத்து உடனடியாக கண் மருத்துவரிடம் செல்லவும்.
பின்பற்றப்பட வேண்டியவை:
1. திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும், சுற்றிலும் எரியக்கூடிய பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
2. ஒரு மூடிய கொள்கலனில் பட்டாசுகளை சேமித்து, எந்த எரியக்கூடிய பொருட்களும் இல்லாத இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.
3. நீண்ட மற்றும் தளர்வான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். சரியான அளவு கொண்ட பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
4. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது, பிரத்தியேக கவனம் செலுத்தி கண்காணிப்பில் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
5. எந்தவிதமான சுவாச பிரச்னைகள் கொண்டவர்கள், வீட்டிற்குள்ளே யே இருக்க வேண்டும்.
6. ஒருவேளை தீ ஏற்பட்டு விட்டால், அதனை அணைக்கும் வகையில் தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியை அருகில் வைத்திருக்க வேண்டும்.
7. ஒவ்வொரு முறை பட்டாசுகளை கையாண்ட பிறகும் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
செய்யக்கூடாதவை என்ன?
1. பட்டாசுகளை கைகளில் வைத்து கொளுத்தக்கூடாது, மெழுவர்த்தி மற்றும் தீக்குச்சி பயன்படுத்தக்கூடாது
2. மெழுகுவர்த்தி மற்றும் தீபங்கள் இருக்கும் இடத்தில் பட்டாசுகளை வைக்கக்கூடாது
3. பாதி எரிந்த நிலையில் இருக்கும் பட்டாசுகளை ஒருபோதும் வீச வேண்டாம்.
4. பட்டாசு வெடிக்கும் போது சில்க் மற்றும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை பயன்படுத்தக்கூடாது.
5. வாகனங்களுக்கு அருகில் வைத்து பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
6. பட்டாசு வெடிக்கும் போது சானிடைசர் பயன்படுத் கூடாது, அருகில் சானிடைசரை வைத்திக்கவும் கூடாது.
Read more ; ஒயிட் போர்டு மட்டுமல்ல.. இனி நீல நிற சொகுசு பஸ்களிலும் மகளிருக்கு இலவச பயணம்..!!