உங்களுக்கு மீன் பிடிக்காதா..? அப்படினா இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..!! ரொம்ப பிடிச்சிரும்..!!
மீன் இயற்கையாகவே ஆரோக்கியம் நிறைந்த உணவு. அதனால் தான் குழந்தைகள், பெரியவர்கள், கர்பிணிப் பெண்கள் என அனைவரும் கடல் உணவுகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.
என்னதான் அசைவ உணவு பிரியராக இருந்தாலும், நம்மில் பலருக்கு மீன் பிடிக்காது. இதற்கு காரணம் அதன் வாசனை மற்றும் முள். ஆனால், இது மீன் என்றே கணிக்க முடியாத அளவுக்கு மீனை வைத்து ஒரு ஸ்நாக் ரெசிபியை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். மீன் சாப்பிடாதவர்கள் கூட இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
மீன் - 300 கிராம்
உருளைக்கிழங்கு - 2
பிரட் - 2
மீடியம் சைஸ் வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - 1 கொத்து
எலுமிச்சை பழம் - 1
மிளகு பொடி, உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* முதலில், ரெசிபி செய்ய எடுத்துக் கொண்ட மீனை மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக கழுவி, எலும்பு நீக்கி முடிந்த அளவு பொடியாக நறுக்கி வைக்கவும்.
* பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி தனியே எடுத்து வைக்கவும்.
* அதே சமயம் எடுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு மற்றும் தண்ணீர் சேர்த்து அவித்து, தோல் நீக்கி பின்னர் மசித்து தனியே எடுத்து வைக்கவும்.
* தற்போது அகன்ற பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் நறுக்கிய மீன், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உருளைக்கிழங்கு, உப்பு, மிளகு, பிரட் பொடி சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
* இறுதியாக எலுமிச்சை பழத்தையும் இரண்டாக நறுக்கி, சாறு புழிந்து இதனுடன் சேர்த்து பிசைந்து அந்த பாத்திரத்தை 15 நிமிடத்திற்கு மூடி அப்படியே ஊற வைக்க வேண்டும்.
* இதற்கிடையில், கேக் தயார் செய்ய ஓவனை 200° வெப்பநிலையில் 10 நிமிடத்திற்கு Preheat செய்து ஓவனை தயார் நிலையில் வைக்கவும்.
* 15 நிமிடம் நன்கு ஊறிய மீன் கேக் சேர்மத்தை ஒரு பேக்கிங் ட்ரேவில் வேண்டிய அளவு மற்றும் வடிவில் பிடித்து வைத்து 200° C வெப்பநிலையில் 15 நிமிடத்திற்கு பேக் செய்து எடுக்க சுவையான மீன் கேக் தயார்.
* இதனுடன் உங்களுக்கு பிடித்த சட்னி அல்லது சாஸ் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.