முதல்வராக இருந்த உங்களுக்கு தெரியாதா..? எடப்பாடியிடம் வந்து விழுந்த கேள்வி..!! சட்டப்பேரவையில் பரபரப்பு..!!
கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை சபாநாயகர் நிராகரித்ததால், அதிமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுக திட்டமிட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நேற்று விவாதம் நடத்தப்பட்டது. உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விளக்கமளித்தார். நேற்று, இந்த விவகாரம் குறித்துப் பேச வாய்ப்பு வழங்கப்படும் என சபாநாயகர் கூறியும் கேள்வி நேரத்தின்போது அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், அவைக்குள் அனுமதித்த பிறகும், விவாதத்தில் பங்கேற்காமல் புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் இன்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர். இதையடுத்து, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அலுவல் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார். இந்த சமயத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு, நினைத்த நேரத்தில் நினைத்ததை பேசும் இடம் சட்டசபை அல்ல. வினா விடை முடிந்ததும் பேசுவதற்கு அனுமதி தருகிறேன். முதல்வராக இருந்த உங்களுக்கு தெரியாதா என எடப்பாடி பழனிசாமியை பார்த்து சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர் பின்னர், அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
Read More : செம குட் நியூஸ்..!! பெண்கள், திருநங்கைகள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்..!! சட்டப்பேரவையில் அறிவிப்பு..!!