தொந்தரவு பண்ணா இனிமே ஆக்ஷன்தான்!… ரயில் பயணிகளுக்கு புதிய செயலி அறிமுகம்!… சிறப்பம்சங்கள் இதோ!
ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் ஸ்லீப்பர் பெட்டியில் வெய்ட்டிங் லிஸ்ட் உள்ள பயணிகள் சிலரும் வந்து அமர்ந்திருப்பார்கள். அது மற்ற பயணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும். இந்த விஷயத்தில் இந்திய ரயில்வே ஒரு முக்கியமான ஒரு விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது. ஆன்லைன் டிக்கெட் முன்பதி செய்து காத்திருப்பு பட்டியலில் வந்தால் சார்ட் தயாரிக்கப்பட்டவுடன் டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்படும். ஆனால் கவுன்டரில் இருந்து டிக்கெட் எடுக்கப்பட்டால் அது ரத்து செய்யப்படாது. இந்த சூழலில் காத்திருப்பு டிக்கெட் வைத்துக் கொண்டு யாரும் முன்பதிவு பெட்டியில் பயணிக்க முடியாது.
ரயில் பயணிகளின் இந்த சிரமத்தைப் போக்க ஒரு சிறப்பு செயலியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் சிறப்பு என்னவென்றால், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணிக்கும் பயணிகள், காத்திருப்பு டிக்கெட் வைத்திருப்பவர்கள் மீது புகார் தெரிவிக்கலாம். தற்போது, இந்த செயலியின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு, பயணிகள் அதை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் தளங்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். காத்திருப்பு பயணச்சீட்டு உள்ளவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிப்பதாகவும், இதனால் மற்ற பயணிகள் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் புகார்கள் வருவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த செயலி இருக்கும் என்று கூறப்படுகிறது.
ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட பிறகு டிக்கெட் பரிசோதகர் தன்னிடம் உள்ள கையடக்கக் கருவி மூலம் முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத இருக்கைகள் பற்றிய தரவுகளை வழங்குவார். இதற்குப் பிறகு, ரயில் பெட்டியின் இருக்கை முன்பதிவு தொடர்பான விவங்களைப் பெறலாம். ஒருவேளை, நிர்ணயித்த எண்ணிக்கையை விட அதிகமானோர் ரயில் பெட்டியில் இருந்தால் இந்த செயலி மூலம் புகார் அளிக்கலாம். இந்த செயலியில் புகார் பதிவு செய்யப்பட்டவுடன், முழுமையான தகவல் தானாகவே ரயில்வே அமைப்புக்குச் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்படும். இதற்கான புகார் கிடைத்த பிறகு, டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் புக்கிங் ஆகாத பயணிகளை சம்பந்தப்பட்ட பெட்டியில் இருந்து இறக்கிவிடுவார்.