சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை குறைபாட்டுடன் பிறக்குமா..? மருத்துவர் அளித்த விளக்கம்..
ஒருவருக்கு குழந்தைப்பேறு கிடைப்பதே இப்போதெல்லாம் அரிதாகி விட்டது. தெருவிற்கு தெரு குழந்தை கருத்தரிப்பு மையம் வந்துவிட்டது. அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கை முறை மாறிவிட்டது. குழந்தை பிறந்தாலும் சில காரணங்களால் குழந்தை உடல் அல்லது மனம் சார்ந்த குறைபாட்டுடன் பிறக்கிறது. இதற்கு காரணம் பெரும்பாலும் சொந்தத்தில் திருமணம் செய்வது தான் அனைவராலும் அறியப்படுகிறது. உண்மையில் சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை குறைபாட்டுடன் பிறக்குமா..? இது குறித்து டாக்டர் தீப்தி அளித்துள்ள விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மனநலம் சார்ந்த மரபணு ரீதியான அறிவியல் விளக்கம் குறித்து மருத்துவர் தீப்தி கூறுகையில், "மனிதனின் 46 குரோமோசோம்களில் 23 தாயிடம் இருந்தும் 23 தந்தையிடம் இருந்தும் பெறப்படுகிறது. இதனால் தாய் தந்தை இருவரில் யாரேனும் ஒருவருக்கு மரபணு குறைபாடு இருந்தாலும் கூட டாமினேஷன் அடிப்படையில் மரபணு குறைபாடு உண்டாகும் வாய்ப்பு பாதிக்கு பாதி உள்ளது.
இதே போன்று மரபணு குறைபாடுகளில் சொந்தத்தில் திருமணம் செய்யும் போது குழந்தை பிறப்பில் 25 சதவீதம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே நேரம் 50 சதவீதம் மரபணுவை கழட்டி செல்லும் வாய்ப்பு உள்ளது. எந்த குறைபாடும் இல்லாமல் பிறப்பதற்கு 25 சதவீதம் வாய்ப்பு உள்ளது. எனவே சொந்தத்தில் திருமணம் செய்தால் 100 சதவீதம் குறைப்பாடுடன் மட்டும் தான் பிறக்கும் என்ற கருத்து தவறானது" என தெரிவித்துள்ளார்.