ராமர் பக்தர்களை துன்புறுத்துவதா..? திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்..!! கொந்தளித்த அண்ணாமலை..!!
ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு கிளியனூர் தனியார் பள்ளியில் நாளை நடக்கவுள்ள நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அசம்பாவிதங்கள் ஏதேனும் நடந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு என காவல்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை கடிதத்தில், விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓமந்தூர் கிராமத்தில் இயங்கி வரும் ஸ்ரீராம் மேல்நிலைப்பள்ளியில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளியில் சுமார் 2,000 பொதுமக்களை அழைத்து விழா நடத்த உள்ளதாக தெரிகிறது. இதற்கு மாவட்ட ஆட்சியரிமோ, நீதிமன்றத்திலோ அனுமதி பெறவில்லை. எனவே, இந்நிகழ்ச்சிக்கு கிளியனூர் காவல்நிலையம் அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்நிலையில், அனுமதி பெறாமல் நடக்கும் நிகழ்ச்சியில் எவையேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால் தாங்களே முழுப்பொறுப்பாவீர்கள்” என்று ஸ்ரீராம் மேல்நிலைப்பள்ளியின் மேலாளருக்கு கிளியனூர் காவல் நிலையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, ”காவல்துறையை தங்கள் பினாமியாகப் பயன்படுத்துவதையும், பகவான் ஸ்ரீராமரின் பக்தர்களைத் துன்புறுத்துவதையும் திமுக அரசு நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.