மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியா..? ஜனவரியில் மழை எப்படி இருக்கும்..? டெல்டா மாவட்டங்கள் தான் டார்கெட்..!!
இன்று அதிகாலை தொடங்கி வட தமிழக மாவட்டங்களில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது. ஜனவரி வரை இப்படியான மழை எதிர்பார்க்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “காற்றழுத்த தாழ்வு பகுதியானது பிசுபிசுப்பான லேசான கடைசி மழையை சென்னைக்கு கொடுத்துள்ளது. தொடர் மழையால் பூண்டி ஏரி 100% நிரம்பியுள்ளது. அதேநேரம் சென்னையை ஒட்டியுள்ள மற்ற ஏரிகளும் 95% நிரம்பியுள்ளன. தற்போது சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெய்து வரும் மழைக்கு காரணம் காற்றழுத்த தாழ்வு பகுதிதான்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 30, 31ஆம் தேதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம். அதேபோல மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஜனவரி மாத தொடக்கத்தில் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் பெரும்பாலும் இலங்கைதான் அதிக மழையை பெறும். தமிழ்நாட்டை பொறுத்த வரை தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியின் இறுதி நாளான இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், நெல்லை, தென்காசி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் சேலம், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, டெல்டா பெல்ட்கள், கோவை, சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி, மாவட்டங்களில் லேசான மழை இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.